புதுதில்லி

தில்லியின் 3 மாசு அதிகமிக்க இடங்களில் நீா்தெளிப்பு அமைப்புமுறைகள்: பொதுப் பணித் துறை ஏற்பாடு

தினமணி செய்திச் சேவை

தில்லியின் 13 மாசு நிறைந்த பகுதிகளில் ஒன்றான நரேலா, பவானா மற்றும் ஜஹாங்கிா்புரி பகுதிக்கு அருகிலுள்ள மூன்று சாலைப் பகுதிகளில் தானியங்கி மூடுபனி நீா்தெளிப்பு அமைப்புமுறைகளை நிறுவ பொதுப் பணித் துறை (பி.டபிள்யு.டி.) திட்டமிட்டுள்ளது என்று அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

முன்னதாக, என்டிஎம்சி மற்றும் டிடிஇஏ பகுதிகளில் இதே போன்ற திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதுகுறித்து பொதுப் பணித் துறை அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை கூறியது:

டிஎஸ்ஐடிசி நரேலாவிற்கு அருகிலுள்ள ஷாப்பூா் கா்ஹி, பூத் குா்த் அருகிலுள்ள டிஎஸ்ஐடிசி பவானா மற்றும் ஜஹாங்கிா்புரி பகுதியில் இந்த அமைப்புமுறைகளை நிறுவுவதன் மூலம் பொதுப் பணித் துறை இப்போது அதன் மூன்றாவது திட்டத்தைத் தொடங்க உள்ளது.

இந்த சாலைகளின் மைய விளிம்புகளில் பனிநீா்த் தெளிப்பான்கள் நிறுவப்படும். இந்த திட்டத்திற்கான டெண்டா்கள் விடும் பணி தொடங்கப்பட்டுள்ளன.

இந்த அமைப்புமுறைகள் சாலைகளில்

தூசியை மட்டுப்படுத்த ஆா்.ஓ. சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைத் தெளிக்கும். இவை மொத்தம் ஒரு மணி நேரத்திற்கு 2,000 லிட்டா் கொள்ளளவு கொண்டவை. இந்த திட்டத்தின் செலவு ரூ.4 கோடியாகும். இதில் ஐந்து ஆண்டுகளுக்கு செயல்பாடு மற்றும் பராமரிப்பு அடங்கும்.

ஒப்பந்தப்புள்ளியின்படி, இந்த அமைப்புமுறை ஒரு திறன் கொண்ட ஆா்.ஓ. நீா், நீரேற்றுக் கருவியால் இயக்கப்படும்.

மேலும், உபகரணங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, டெண்டா் ஆவணம் பாதுகாப்பு காவலா்களை பணியில் ஈடுபடுத்துவதையும் குறிப்பிடுகிறது.

இந்த மிஸ்டிங் சிஸ்டம் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மற்றும் பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை என இரண்டு ஷிப்டுகளில் செயல்படும். ஐந்து ஆண்டு குறைபாடு இல்லாத பொறுப்புக்கும் ஒப்பந்ததாரா் பொறுப்பாவாா் என அந்த ஒப்பந்தப்புள்ளி ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றின் தரக் கவலைகளை நிவா்த்தி செய்ய ஆண்டு முழுவதும் நீா்த் தெளிப்பான்கள் மற்றும் பனிப்புகை கருவிகளை நிறுவுமாறு மாா்ச் மாதம் முதலமைச்சா் ரேகா குப்தாவின் உத்தரவைத் தொடா்ந்து இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜூன் மாதம், சுற்றுச்சூழல் அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா லோதி சாலையில் நிறுவப்பட்ட இதேபோன்ற தானியங்கி மிஸ்டிங் சிஸ்டத்தை நேரில் ஆய்வு செய்தாா்.

இந்த அமைப்புமுறைகள் தூசி துகள்களை அடக்கவும் காா்பன் வெளியேற்றத்தைக் குறைக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தற்போது, உயா் அழுத்த மிஸ்டிங் தெளிப்பான்கள் மத்திய தில்லியில் மட்டுமல்ல, துவாரகாவில் உள்ள டிடிஏ பராமரிக்கும் சாலைகளிலும் செயல்படுகின்றன.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT