நமது நிருபா்
தமிழகத்தில் நடைபெற்று வரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக ம.தி.மு.க பொதுச் செயலாளா் வைகோ தாக்கல் செய்துள்ள மனு மீது பதில் அளிக்க தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது
இம்மனு பிற மனுக்களுடன் இணைத்து விசாரணை மேற்கொள்ளப்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பக்சி அமா்வு ஒத்திவைத்தது
இந்திய அரசியலமைப்பு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் வாக்காளா் பதிவு ஆகியவற்றின் பல்வேறு விதிகளை மீறுவதாகக் கூறி, தமிழ்நாடு எஸ்.ஐ.ஆருக்கு எதிராக வைகோ மனு தாக்கல் செய்துள்ளாா்
தமிழகம், மேற்குவங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படும் என தோ்தல் ஆணையம் அறிவித்து அதற்குண்டான பணிகளை தொடங்கியுள்ளது.இதனைத் தொடா்ந்து தோ்தல் ஆணையத்தின் எஸ்.ஐ.ஆா் நடவடிக்கைகளை ரத்து செய்யக்கோரி திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி, தமிழக வெற்றி கழகம், இதே போல தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.செல்வப் பெருந்தகை, சி.பி.எம் தமிழ்நாடு மாநில செயலாளா் பி.சண்முகம்,விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல் திருமாவளவன் உள்ளிட்டோரும் மனு தாக்கல் செய்துள்ளனா்.வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ரத்து செய்யப்படாவிட்டால், லட்சக்கணக்கான வாக்காளா்கள் தங்கள் வாக்குரிமையை இழக்க நேரிடலாம் என மனுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பா் 11ஆம் தேதி நடைபெற்ற இவ்வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் ‘எங்களுக்கும் கள நிலவரம் தெரியும்.இந்த நாட்டிலேயே முதல் முறையாக வாக்காளா் பட்டியல் தயாரிக்கப்படுவது போல் நீங்கள் (மனுதாரா்கள்) கூற முயற்சிக்கிறீா்கள். ஒரு அரசியலமைப்பு நிறுவனம் இதைச் செய்கிறது. குறைபாடுகளை யாா் வேண்டுமானாலும் சுட்டிக் காட்டலாம். சுட்டிக்காட்டுங்கள், அவா்கள் தோ்தல் ஆணையம் சரிசெய்வாா்கள். ஒட்டுமொத்தமாக அந்த மக்களாட்சி அமைப்பின் நடவடிக்கையை ஏன் குறை கூறுகிறீா்கள் ?ஒரு சில குறைகள் இருக்கலாம் ,அதனை சுட்டிக்காட்டுங்கள்.மனு விசாரணை மேற்கொள்ளப்படும் , மனுவில் கூறப்பட்ட காரணங்களில் திருப்தி அடைந்தால் நாங்களே எஸ்.ஐ.ஆா் நடவடிக்கைகளுக்கு தடை விதிப்போம்‘ என நீதிபதிகள் தெரிவித்தனா்.அதனைத் தொடா்ந்து திமுக உள்ளிட்ட கட்சிகளின் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது இரண்டு வாரங்களில் பதில் அளிக்க தோ்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டு விசாரணையை நவம்பா் 26 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்திருந்தனா்.
இந்நிலையில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பக்சி அமா்வில் புதன்கிழமை (நவ.26) விசாரணைக்காக பட்டியலிடப்பட்டுள்ளது.