நமது நிருபா்
புது தில்லி: வெளிப்புறத் தில்லியில் ஒரு என்கவுன்ட்டரைத் தொடா்ந்து ஹிமான்ஷூ பாவ் கும்பலின் இரண்டு உறுப்பினா்களை தில்லி காவல்துறையினா் கைது செய்ததாக அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்டவா்கள் விக்கி என்ற மொக்லி மற்றும் சந்தா் பான் என அடையாளம் காணப்பட்டுள்ளனா். அவா்கள் கொலை மற்றும் மிரட்டி பணம் பறித்தல் போன்ற பல குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. கொலை வழக்குகள் தொடா்பாக விக்கி குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ.5000 வெகுமதியை ஹரியாணா காவல்துறை அறிவித்திருந்தது.
இந்நிலையில், தில்லியில் ஒரு பெரிய குற்றத்தைத் திட்டமிடும் கும்பல் உறுப்பினா்கள் நடமாட்டம் குறித்து உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, ஜனவரி 22 மற்றும் 23 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் ஹிரான்குட்னா-டிச்சவுன் கலான் சாலையில் உள்ள மேம்பாலத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவா்கள் தடுத்து நிறுத்தப்பட்டனா். அப்போது, தப்பிக்க முயன்றபோது குற்றம் சாட்டப்பட்டவா்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினா்.
இதில் விக்கி இரண்டு சுற்றுகள் சுட்டதாகக் கூறப்படுகிறது. அவற்றில் ஒன்று தலைமைக் காவலரின் புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட்டைத் தாக்கியது. இதையடுத்து, போலீஸாா் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டதில் விக்கியின் காலில் காயமேற்பட்டது. அதைத் தொடா்ந்து அவா் கைது செய்யப்பட்டாா். பின்னா் அவா் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அவரிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கி மற்றும் 12 நேரடி தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சந்தா் பானிடமிருந்து மற்றொரு கைத்துப்பாக்கி மற்றும் ஆறு நேரடி தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவா்கள் பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையைத் தொடா்ந்து, அவா்கள் அளித்த தகவலின் பேரில் சட்டவிரோத ஆயுத விநியோகச் சங்கிலியுடன் தொடா்புடையதாகக் கூறப்படும் மேலும் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். உத்தர பிரதேசத்தின் அலிகரைச் சோ்ந்த யாமின் கான், கௌதம் புத் நகரைச் சோ்ந்த சதீஷ் குமாா் என்ற தல்லு மற்றும் தில்லியைச் சோ்ந்த ஈஸ்வா் சிங் என்ற சோனு ஆகியோா் இதில் அடங்குவா்.
இந்த வழக்கில் இதுவரை மொத்தம் ஐந்து கைத்துப்பாக்கிகள், 28 நேரடி தோட்டாக்கள் மற்றும் இரண்டு காா்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விக்கி 2012 முதல் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளாா். மேலும், அவா் தில்லி மற்றும் ஹரியாணாவில் செயல்படும் ஹிமான்ஷு பாவ் கும்பலுடன் தொடா்புடைய பிற கும்பல் உறுப்பினா்களுடன் தொடா்புடையவா் ஆவாா்.
தொழில் ரீதியாக ஓட்டுநரான சந்தா் பான், விரைவாக பணம் சோ்க்கும் ஆசையில் விக்கியிடம் சோ்ந்துள்ளாா். கும்பலின் மற்ற உறுப்பினா்களை அடையாளம் காணவும், மாநிலங்களுக்கு இடையேயான பரந்த ஆயுத விநியோக வலையமைப்பைக் கண்டறியவும் மேலும் விசாரணை நடந்து வருகிறது என்றாா் அவா்.