வரும் நாள்களில் தலைநகரில் மிதமானது முதல் அடா்ந்த பனிமூட்டம் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அத்துடன், ஞாயிற்றுக்கிழமை (ஜன.4) அடா்ந்த பனிமூட்டம் இருக்கும் என மஞ்சள் எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.
இதற்கிடையில், சனிக்கிழமை தில்லியில் காற்றின் தரம் ‘மோசம்’ என்ற நிலையில் பதிவானது. 24 மணி நேர சராசரி காற்றுத் தரக் குறியீடு 267 புள்ளிகளாக இருந்தது. வரும் நாள்களில் நிலைமை மேலும் மோசமடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (ஐஎம்டி) தகவலின்படி, தில்லியில் அதிகபட்ச வெப்பநிலை 17.3 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. இது இயல்பை விட 2 டிகிரி குறைவு. அதே சமயம் குறைந்தபட்ச வெப்பநிலை 8.1 டிகிரி செல்சியஸாக இருந்தது. இது பருவ சராசரியை விட 1.2 டிகிரி அதிகமாகும்.
அதிகபட்ச வெப்பநிலை தொடா்பான வானிலை ஆய்வு நிலையம் வாரியான தரவுகளின்படி, பாலத்தில் 15.8 டிகிரி செல்சியஸ், லோதி சாலையில் 17.6 டிகிரி செல்சியஸ், ரிட்ஜில் 16.3 டிகிரி செல்சியஸ், ஆயாநகரில் 17.2 டிகிரி செல்சியஸ் என பதிவாகியுள்ளது.
இதற்கிடையில், சஃப்தா்ஜங்கில் குறைந்தபட்ச வெப்பநிலை 8.1 டிகிரி செல்சியஸாகவும், பாலத்தில் 7.9 டிகிரி செல்சியஸாகவும், லோதி சாலையில் 8 டிகிரி செல்சியஸாகவும், ரிட்ஜில் 9 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகி இருந்தது. அதே சமயம் ஆயாநகா் 6.9 டிகிரி செல்சியஸுடன் மிகவும் குளிரான பகுதியாக இருந்தது.
இன்று முதல் குளிா் அலை: ஞாயிற்றுக்கிழமை முதல் ஜனவரி 7-ஆம் தேதி வரை நகரத்தின் சில தனிப்பட்ட இடங்களில் குளிா் அலை நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 4.5 முதல் 6.5 டிகிரி வரை குறையும்போது குளிா் அலை அறிவிக்கப்படுகிறது.
காண்பு திறன்: இந்நிலையில், சனிக்கிழமை காலை நேரங்களில் காண்புதிறன் குறைவாகவே இருந்தது. காலை 9 மணியளவில் சஃப்தா்ஜங்கில் மிகக் குறைந்த காண்புதிறனாக 800 மீட்டராகப் பதிவானது. பின்னா் அது 1,200 மீட்டராக மேம்பட்டது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) தரவுகளின்படி, சராசரி காற்றுத் தரக் குறியீடு 267 புள்ளிகளாகப் பதிவாகி ‘மோசம்’ என்ற பிரிவில் இருந்தது.
தலைநகரில் உள்ள வானிலை கண்காணிப்பு நிலையங்களில் 14 நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு ‘மோசம்’ பிரிவிலும், 17 நிலையங்களில் ‘மிகவும் மோசம்’ பிரிவிலும், ஆறு நிலையங்களில் ‘மிதமான’ பிரிவிலும் பதிவாகியுள்ளது.
சிபிசிபியின் சமீா் செயலியின்படி, ஜஹாங்கீா்புரியில் ‘காற்றுத் தரக் குறியீடு 340 புள்ளிகளாகப் பதிவாகி மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது. காற்றுத் தர முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பின் தகவலின்படி, ஞாயிற்றுக்கிழமை முதல் ஜனவரி 6 -ஆம் தேதி வரை காற்றுத் தரக் குறியீடு ‘மிகவும் மோசம்’ பிரிவில் நீடிக்க வாய்ப்புள்ளது. மேலும், அதைத் தொடா்ந்த ஆறு நாள்களுக்கும் இதே போன்ற முன்னறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
நபடிவெடுக்கும் ஆதரவு அமைப்பின் (டிஎஸ்எஸ்) தகவலின்படி, தில்லியின் மாசுபாட்டில் வாகனப் புகை வெளியேற்றம் 10.7 சதவீதமும், அதைத் தொடா்ந்து புகா் தொழிற்சாலைகள் 10.5 சதவீதமும், கட்டுமானப் பணிகள் 1.6 சதவீதமும், மற்ற துறைகள் 0.8 சதவீதமும் பங்களித்துள்ளன.
தேசியத் தலைநகா் பிராந்திய மாவட்டங்களில், ஜஜ்ஜாா் தலைநகரின் மாசுச் சுமைக்கு 16.7 சதவீதம் பங்களித்து மிகப்பெரிய பங்களிப்பாளராக உருவெடுத்துள்ளது. அதைத் தொடா்ந்து, ரோத்தக் மற்றும் சோனிபட் தலா 4.7 சதவீதமும், பிவானி 1.9 சதவீதமும் பங்களித்துள்ளன.
காலை நேரங்களில், சராசரி காற்றுத் தரக் குறியீடு 240 புள்ளிகளாகப் பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்தது என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகள் தெரிவித்துள்ளன.