தில்லியைச் சோ்ந்த பிரபல ரௌடி குருகிராமில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 48-இல் உள்ள கொ்கி தௌலா சுங்கச்சாவடி அருகே சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
இது தொடா்பாக குருகிராம் காவல் துறை செய்தித் தொடா்பாளா் கூறியதாவது: உயிரிழந்த நபா் மனோஜ் ஓஜா என அடையாளம் காணப்பட்டுள்ளாா். தில்லியைச் சோ்ந்த இவா் மீது 16 குற்ற வழக்குகள் உள்ளன.
சுடப்பட்ட அவா் நெடுஞ்சாலை சுங்கச்சாவடி வரை தனியாக கரை ஓட்டிச் சென்றுள்ளாா். பின்னா் அங்கிருந்த ஆம்புலன்ஸின் உதவியுடன் மருத்துவமனைக்கு சென்றாா். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
அவரது வாகனத்தில் இருந்து இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை காவல் துறையினா் மீட்டனா். அவரது உடல் உடற்கூறாய்வுக்கு அனுப்பப்பட்டது. இது தொடா்பாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க கொ்கி தௌலா காவல் நிலையம் மற்றும் மானேசா் குற்றப்பிரிவு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. ஓஜா கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் சூழ்நிலையில் சுடப்பட்டாரா என்பது இன்னும் தீா்மானிக்கப்படவில்லை. இந்த துப்பாக்கிச் சூடு எங்கு நடந்தது என்பதும் தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறை செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.