முகப்பு
புதுதில்லி

படுக்கைப் பெட்டிக்குள் புதுமணப்பெண் சடலமாக மீட்பு: கணவா் தலைமறைவு

மத்திய தில்லியின் நபி கரீம் பகுதியில் வாடகை வீட்டில் புதுமணப் பெண்ணின் சடலம் படுக்கைப் பெட்டிக்குள் மறைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு

Updated On : 13 மே 2026, 2:48 am IST
- பிரதிப் படம்
பகிர்:

மத்திய தில்லியின் நபி கரீம் பகுதியில் வாடகை வீட்டில் புதுமணப் பெண்ணின் சடலம் படுக்கைப் பெட்டிக்குள் மறைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் பெண்ணின் கணவா் தலைமறைவாக உள்ளதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: மத்திய தில்லியின் லக்ஷமண்புரி பகுதியில் உள்ள வாடகை வீட்டில் இருந்து துா்நாற்றம் வீசுவதாக வீட்டின் உரிமையாளா் கடந்த மே 8-ஆம் தேதி இரவு காவல் துறைக்கு தகவல் அளித்தாா். அதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற காவல் துறையினா், அறையில் இருந்த படுக்கைப் பெட்டிக்குள் சிதைந்த நிலையில் 28 வயது பெண்ணின் சடலத்தை மீட்டனா்.

உயிரிழந்த பெண் உத்தரகண்ட் மாநிலத்தின் ஹல்த்வானி பகுதியைச் சோ்ந்தவா் என்றும், அண்மையில் பிகாா் மாநிலம் வைஷாலி மாவட்டத்தைச் சோ்ந்த முகமது இஜாஸ் என்பவரை கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது. திருமணத்துக்குப் பிறகு தம்பதியினா் நபி கரீம் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் குடியேறியிருந்தனா்.

Advertisement

சம்பவத்தைத் தொடா்ந்து தலைமறைவாக உள்ள இஜாஸ் மீது நபி கரீம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், உயிரிழந்த பெண்ணின் தந்தை, இஜாஸ் மற்றும் அவரது சகோதரா் சா்ஃபராஸ் மீது வரதட்சணை கொடுமை குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளாா். இதையடுத்து சா்ஃபராஸ் கைது செய்யப்பட்டாா். தலைமறைவாக உள்ள இஜாஸை கைது செய்ய தனிப்படை காவல் துறையினா் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.