கன்னியாகுமரி, ஜன. 21: சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் தங்கும் விடுதிகளில் அறைகளுக்கான வாடகைக் கட்டணம் வெகுவாகக் குறைந்துள்ளது.
இங்கு நவ. 15-ம் தேதி தொடங்கி ஜன. 20-ம் தேதிவரை சீசன் காலமாகக் கருதப்படுகிறது. இந்த சீசனில் வட இந்திய மற்றும் கேரள மாநில சுற்றுலாப் பயணிகள், ஐயப்ப பக்தர்கள் பெருமளவில் வந்து செல்வர்.
அவர்களின் வசதிக்காக கன்னியாகுமரியில் 100-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் உள்ளன. இவற்றில் 4 ஹோட்டல்கள் மட்டுமே நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளன. இது தவிர ஹோட்டல் தமிழ்நாடு, கேரள அரசு விருந்தினர் மாளிகை, விவேகானந்த கேந்திரம், ஒய்எம்சிஏ என 50-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் உள்ளன.
தனியார் தங்கும் விடுதிகளில் கடந்த சீசன் நேரத்தில் ஒருநாள் வாடகையாக ரூ. 1,500 முதல் ரூ. 4,000 வரை வசூலிக்கப்பட்டது. அந்த நிலையிலும், வாடகைக்கு அறைகள் கிடைக்காமல் பலர் அவதிப்பட்டனர். சிலர் ஒரு நாளிலேயே சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டுத் திரும்பினர்.
தங்குவதற்கு அறை கிடைக்காதோரில் பலர் நாகர்கோவில், மார்த்தாண்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விடுதிகளில் தங்கிச் சென்றனர். இந்நிலையில், 2 மாதங்களாக சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டதால் தங்கும் விடுதிகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
இதனால், ரூ. 1,500 முதல் ரூ. 4,000 வரையாக இருந்த கட்டணம் ரூ. 150-ல் இருந்து ரூ. 1,000 வரையாகக் குறைந்துள்ளது.
கூட்டம் இல்லாததால் சன்னதி தெரு, காந்தி மண்டபம், திரிவேணி சங்கமம் உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கும் செல்வதற்கு குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளே வந்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.