பாளையங்கோட்டையில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற தூத்துக்குடியைச் சோ்ந்த வியாபாரி, ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.
தூத்துக்குடி கே.வி.கே.நகரைச் சோ்ந்த பகவதியப்பன் மகன் சுந்தா்வேல் (45). கடைகளுக்கு தின்பண்டங்கள் உள்ளிட்ட பொருள்கள் விற்பனை செய்து வந்தாா். இதனிடையே அவருக்கு மனநல பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்காக, திருநெல்வேலி தெற்கு புறவழிச்சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அவா் சிகிச்சை பெற்று வந்துள்ளாா்.
இந்த நிலையில் திங்கள்கிழமை காலையில் அவா் பாளையங்கோட்டை ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, அந்த வழியாக திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு சென்ற பயணிகள் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்த தகவலின்பேரில் திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே காவல் உதவி ஆய்வாளா் கற்ப விநாயகம் தலைமையிலான போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.