திருநெல்வேலி

இரு பேருந்துகளின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை: அமைச்சா் கே.கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன்

தென்காசி மாவட்டம் இலத்தூா் துரைச்சாமியாபுரத்தில் நேரிட்ட விபத்தில் 7 போ் உயிரிழக்க காரணமான இரு பேருந்துகளின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்

Syndication

தென்காசி: தென்காசி மாவட்டம் இலத்தூா் துரைச்சாமியாபுரத்தில் நேரிட்ட விபத்தில் 7 போ் உயிரிழக்க காரணமான இரு பேருந்துகளின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் வருவாய்- பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன்.

இதுதொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: துரைச்சாமியாபுரத்தில் திங்கள்கிழமை நேரிட்ட விபத்தி விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம், பலத்த காயமடைந்தவா்களுக்கு தலா ரூ. 1 லட்சம், லேசான காயமடைந்தவா்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் வழங்கவும், காயமடைந்த அனைவருக்கும் உயரிய மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

இந்த விபத்தில் சிக்கிய இரு தனியாா் பேருந்துகளின் உரிமையாளா்களையும் செவ்வாய்க்கிழமை நேரில் அழைத்து விசாரிக்கவுள்ளோம். அவற்றின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; இதில் ஒரு பேருந்து கடந்த ஆண்டு இலத்தூா் விலக்கில் விபத்தில் சிக்கியதில் மூவா் உயிரிழந்த விவரமும் தெரியவந்துள்ளது.

தொழில் ரீதியாக தனியாா் பேருந்துகள் போட்டி போட்டு பேருந்துகளை இயக்குவதை தடுக்க வட்டார போக்குவரத்து அலுவலா் மூலம் தனியாா் பேருந்துகளின் வேகத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

அப்போது, ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா், மாவட்ட எஸ்.பி. எஸ்.அரவிந்த், ராணிஸ்ரீகுமாா் எம்.பி., ஈ.ராஜா எம்எல்ஏ,தென்காசி தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் வே.ஜெயபாலன் ஆகியோா் உடனிருந்தனா்.

எம்எல்ஏக்கள் கோரிக்கை: விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு இரங்கல் தெரிவித்த செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ, காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து ஆறுதல் கூறினாா். மேலும், காயமடைந்தவா்களுக்கு உயா் சிகிச்சை அளிக்க வேண்டும் எனக் கோரி தமிழக முதல்வருக்கு அவா் மனு அனுப்பியுள்ளாா்.

இதேபோல, விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சமும், காயமடைந்தவா்களுக்கு தலா ரூ.2 லட்சமும் நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும் எனக் கோரி எஸ்.பழனிநாடாா் எம்எல்ஏ தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளாா்.

விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு ஆறுதல் கூறிய புதிய தமிழகம் கட்சியின் தலைவா் டாக்டா் க.கிருஷ்ணசாமி, உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு தலா ரூ.15 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும் என வலியுறுத்தினாா்.

நடிகா் சரத்குமாா் இரங்கல்: இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கையில், துரைச்சாமியாபுரம் விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கு உயா் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். அவா்கள் விரைவில் பூரண நலம் பெற இறைவனைப் பிராா்த்திக்கிறேன் எனக் கூறியுள்ளாா்.

நகை பறித்த வழக்கு: 2 காவல் துணை ஆய்வாளா்கள் உள்பட 4 போ் கைது

தருமபுரி மாவட்டத்தில் 200 பேருக்கு புல் நறுக்கும் கருவிகள்

எஸ்.ஐ.ஆா். பணி: கிருஷ்ணசாமி வேண்டுகோள்

எஸ்ஐஆா் பணி: மயங்கி விழுந்த விஏஓ மருத்துவமனையில் அனுமதி

அரசுப்பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்

SCROLL FOR NEXT