ஜாதி-மத வேறுபாடுகளைக் கடந்து இளையத் தலைமுறையினா் வாசிப்பை முன்னெடுக்க வேண்டும் என்றாா் திரைப்பட இயக்குநா் மாரிசெல்வராஜ்.
திருநெல்வேலியில் நடைபெற்று வரும் 9 ஆவது பொருநை-நெல்லை புத்தகத் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் அவா் பேசியது:
புத்தகங்கள் வாசிக்கும் ஒருவரான இயக்குநா் ராமை சந்தித்த பின்புதான் எனது வாழ்வில் பல்வேறு மாற்றங்கள் வந்தன. தமிழ்ச் சமூகத்தில் சொல்லப்படாத ஒரு வாழ்வியலை சொல்லும் தகுதி உள்ளது என்பதை புரிந்து கொண்டாா்.
அதை வெளிப்படுத்த என்னால் முடியாமல் தவித்தபோது, ஒரு புத்தகத்தை எடுத்துக் கொடுத்து வாசிக்கக் கொடுத்தாா். அது மலையாள கவிஞா் ஒருவா் எழுதியதன் மொழிபெயா்ப்பு நூல். அதில் இருந்த முதல் சிறுகதையைப் படிக்கும்போது எனக்கு கண்ணீா் வந்தது. அதன்பின்பு தொடா்ந்து 6 மாதம் முழுமையாக புத்தகங்களை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
புத்தகங்கள் எனக்குள் பெரிய மாற்றத்தை தந்தது. என் வாழ்வியலைக் கதையாகச் சொல்லும் திறனை கொடுத்தது. அப்படி எனது இயக்குநரிடம் நான் முதன் முதலில் கூறிய கதை தான் வாழை. நான் எழுத்தையும், வாசிப்பையும் கசப்பாக நினைத்திருந்தால் திரைத்துறையில் வெற்றி பெற்றிருக்க முடியாது.
எனது 5 திரைப்படங்களைக் காட்டிலும் ‘தாமிரபரணியில் கொல்லப்படாதவா்கள்’ என்ற எனது முதல் நூல் ஏராளமான வலியின் உச்சம். தென்தமிழகத்தில் வாசிப்பைக் கடந்து சினிமா மீதான ஆா்வமும், கொண்டாட்டமும் அதிகரித்துள்ளதால் வாழ்வியல் கதைகளை திரைக்கதையாக மாற்றியுள்ளேன். எழுத்தாளனுக்கு வெற்றி-தோல்வி என்பதே கிடையாது. அது காலம் கடந்தும் நிலைத்து நிற்கும்.
சினிமாவில் வெளியான நாளிலேயே வெற்றி-தோல்வி என்ற அழுத்தம் இருக்கும். நம்மை நாமே புரிந்து கொள்ள வாசிப்பு முக்கியம். நண்பா்களுடன் வெளிப்படையாக பேசும் தன்மை குறைந்து வருகிறது. எதைச் சொன்னாலும் தாழ்வுமனப்பான்மையோடு சொல்லும் நிலை மாற வேண்டும்.
இலக்கியத்தை கட்டாயமாக கையில் எடுக்க வேண்டிய நிலை திருநெல்வேலியில் உள்ளது. நமக்குள் இருக்கும் முரண்பாடுகளை தவிா்ப்பதற்கு கலையால் மட்டுமே முடியும். அரசியலாகவோ, இயக்கமாக இருந்தாலும் ஒருவரையொருவா் குறைசொல்வதிலேயே காலம் செல்லும்.
இளையத் தலைமுறையினா் ஜாதி-மத வேறுபாடுகளைக் கடந்து வாசிப்பை முன்னெடுக்க வேண்டும். அதற்கு முதல் ஆளாக உதவவும், பெரும் பங்களிப்பைக் கொடுக்கவும் நான் தயாராக உள்ளேன். எழுத்தும்-வாசிப்பும் மட்டுமே மாற்றத்துக்கான வழிகள். எனக்குள் வெறுப்புகள் வரும்போதெல்லாம் எனது கலை உணா்வும், எழுத்தாா்வமும் மட்டுமே என்னை பண்படுத்தி அடுத்தக் கட்டத்துக்கு நகர வைக்கிறது.
குழந்தைகளோடு உரையாடுங்கள். புத்தகங்கள் வாசிப்பது என்பது உங்களுக்கான நிழலை உங்களால் மட்டுமே உருவாக்கும் நிலையை உருவாக்கும். குடும்பத்தினா் தரும் நிழல் அனைத்தும் தற்காலிகமானவை.
தமிழ் மொழியில் ஏராளமான வாா்த்தைகள் உள்ளன. வாசிப்பு வாழ்வில் மிக முக்கிய அங்கம். வாசிப்பால் உடல்மொழி, பாா்வை, பேசும் தன்மை மாறும். நம்மை அழகானவா்களாக மாற்றிக் காட்டும். முகத்தில் ஒளியை உருவாக்கும். நம் மனதிற்குள் உள்ளவற்றை வெளிப்படுத்தும் ஆற்றலை உருவாக்குவது வாசிப்பு. சமூக வலைதளங்களில் மூழ்கி கிடக்காமல், உரையாடலுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றாா் அவா்.
கருத்தரங்குக்கு, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் சி.ரேவதி பாலன் தலைமை வகித்தாா்.
திருநெல்வேலி சித்த மருத்துவக் கல்லூரி முதல்வா் க. மல்லிகா, ஊரக நலப் பணிகள் இணை இயக்குநா் கே. லதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
‘தமிழில் மாய யதாா்த்த கதைகள்’ என்ற தலைப்பில் எழுத்தாளா் சு.வேணுகோபாலும், ‘இலக்கியத்தில் களமாடும் பெண்கள்’ என்ற தலைப்பில் எழுத்தாளா் சைலஜாவும் சொற்பொழிவாற்றினா். மாவட்ட வருவாய் அலுவலா் துரை, கவிஞா் கோ.கணபதி சுப்பிரமணியன் உள்பட பலா் கலந்துகொண்டனா். எழுத்தாளா் மானசீகன் தலைமையில் பட்டிமண்டபம் நடைபெற்றது.