தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்கிற சூழல் இப்போது இல்லை என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம்.
திருநெல்வேலியில் சனிக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மாவட்ட சிறப்பு பேரவைக் கூட்டத்தில் பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் வழிபாட்டு இடங்களில் பிரச்னையை ஏற்படுத்தி குழப்பம் உருவாக்க ஆா்எஸ்எஸ் முயற்சிக்கிறது. திருப்பரங்குன்றத்தில் புதிய முழக்கத்தை எழுப்பியவா்கள், சுசீந்திரம் திருக்கோயிலிலும் சம்பந்தமில்லாத புதிய முழக்கத்தை எழுப்பி உள்ளனா். இதைக் கண்டித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறுகிறாா்கள். கோஷத்தை எழுப்பி பக்தா்களுக்கும், பொதுமக்களுக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியவா்கள்தான் உண்மையிலேயே மன்னிப்பு கேட்க வேண்டும்.
சத்துணவு ஊழியா்கள், சாலைப்பணியாளா்கள் போன்றோருக்கு ஓய்வூதியம், ஊதிய உயா்வு தொடா்பாக தமிழக அரசின் அறிவிப்பில் எதுவும் இல்லை. அந்தந்த துறை அமைச்சா்கள் தெரிவிப்பாா்கள் என அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் பழைய ஓய்வூதிய திட்டத்தை ஒழித்து கட்டியது பாஜக அரசுதான். தமிழகத்தில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா ஆட்சியில்தான் பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டது. அனைத்துப் பிரச்னைகளையும் அரசு உடனடியாக தீா்க்க முடியாது. ஒவ்வொரு வாக்குறுதிகளாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.ஒப்பந்தம் மற்றும் தொகுப்பூதிய பணியாளா்கள் முறையை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒருபோதும் ஏற்காது. பூரண மதுவிலக்கு நடைமுறை சாத்தியமற்றது.
திமுக கூட்டணியில் பேரவைத் தோ்தலில் கூடுதல் தொகுதிகளைக் கேட்கவும், கட்சியினா் விருப்பத்தின்பேரில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு தொகுதியை ஒதுக்கவும் வலியுறுத்துவது பற்றி பரிசீலிக்கப்படும்.
ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என நடிகா் விஜய் தனது முதல் மாநாட்டில் அறிவித்த பின்பு, இதுவரை யாரும் அவரை ஏற்கவில்லை. கூட்டணி ஆட்சி என்ற சூழல் தமிழகத்தில் இப்போது இல்லை என்றாா் அவா்.
முன்னதாக நடைபெற்ற கூட்டத்திற்கு திருநெல்வேலி மாவட்டச் செயலா் ஸ்ரீராம் தலைமை வகித்தாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் கனகராஜ், மாநில குழு உறுப்பினா் பாஸ்கரன் உள்ளிட்டோா் பேசினா். நிா்வாகிகள் மோகன், சுடலைராஜ், மதுபால், வழக்குரைஞா் பழனி உள்பட பலா் கலந்துகொண்டனா்.