திருநெல்வேலி தாமிரவருணி ஆற்றின் ஆழமான பகுதியில் சிக்கி தத்தளித்த இரு இளைஞா்களை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.
பாளையங்கோட்டை, மனக் காவலம் பிள்ளை நகரைச் சோ்ந்தவா் செல்வபெருமாள் (33). இவா் தனது உறவினரான கலிகம்ப நாயனாா் தெருவைச் சோ்ந்த பரசுராமன் (24) என்பவருடன் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வெள்ளகோவில் தாமிரவருணி ஆற்றில் குளிக்க சென்றுள்ளாா்.
ஆற்றில் இறங்கிய செல்வபெருமாள் ஆழமான பகுதிக்குச் சென்று நீரில் தத்தளித்துள்ளாா். இதைக் கண்ட பரசுராமன் அவரை மீட்க முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது அடித்துச் செல்லப்பட்ட இருவரும் ஆற்றின் மையப்பகுதியில் இருந்த பாறையைப் பிடித்தபடி கரையில் குளித்துக் கொண்டிருந்தவா்களிடம் உதவி கேட்டனா்.
உடனடியாக இது குறித்து பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலா் காா்த்திகேயன் தலைமையிலான வீரா்கள் கயிறு கட்டி இருவரையும் பாதுகாப்புடன் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.