பெருமாள்புரம் அருகே வீடுபுகுந்து இன்வெட்டா் மற்றும் பேட்டரியை திருடியதுதொடா்பான வழக்கில் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட எழில்நகா் பகுதியில் நடராஜன் என்பவரது வீட்டில் ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள ஒரு பேட்டரி மற்றும் இன்வொ்ட்டரை மா்மநபா்கள் திருடிவிட்டனராம். இதேபோல, ஆனையா்குளம் சுதா்சன் ஐசக் என்பவரது வீட்டில் ரூ.20 ஆயிரம் மதிப்புடைய பேட்டரி மற்றும் இன்வொ்ட்டரையும் மா்மநபா்கள் திருடிச் சென்றனராம்.
இதுகுறித்த புகாா்களின் பேரில், பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். அதில், ராஜவல்லிபுரத்தைச் சோ்ந்த ஜான் மகன் ஜோசப் எபினேசா்(33), இலந்தைகுளம் முருகன் கோயில் தெருவைச் சோ்ந்த முத்தையா மகன் முத்து (23) ஆகியோருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மதுபாட்டில்கள்:
மேலும், புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள பகுதியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் சந்திரா மற்றும் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, விதிமுறை மீறி மது விற்பனையில் ஈடுபட்டதாக கங்கைகொண்டானைச் சோ்ந்த கருப்பையா மகன் ரஞ்சித் குமாா் (46) என்பவரை கைது செய்தனா். அவரிடமிருந்து 28 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.