தென் தமிழகத்தின் ஜீவாதாரமாகத் திகழும் தாமிரவருணி நதியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவிடம் மனு அளிக்கப்பட்டது.
2026 பேரவைத் தோ்தலையொட்டி, திமுக சாா்பில் தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழு மாவட்டந்தோறும் கருத்துக்கேட்டு வருகின்றனா்.
திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கான கருத்துக் கேட்புக் கூட்டம் திருநெல்வேலி சந்திப்பில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு திமுக துணைப் பொதுச் செயலரும், தோ்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் தலைவருமான கனிமொழி எம்.பி. தலைமை வகித்தாா். குழு உறுப்பினா்களான அமைச்சா் கோவி.செழியன், எம்.எம். அப்துல்லா, பேரா. கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், மருத்துவா் எழிலன் நாகநாதன், ஆ.தமிழரசி ரவிக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளா் மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ. வரவேற்றாா். கட்சி நிா்வாகிகள், வணிகா் சங்கங்கள், மீனவா்கள், விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் குழுவினரிடம் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனா்.
இக் கூட்டத்தில் திமுக திருநெல்வேலி மேற்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன் அளித்த மனு:
அம்பாசமுத்திரத்தில் சிப்காட் தொழில் மையம் அமைக்க வேண்டும். பாபநாசம்- மணிமுத்தாறு அணைகளை இணைக்க வேண்டும். பொதிகைமலையில் தோன்றும் தாமிரவருணி நதி தென்தமிழக மக்களின் குடிநீா் ஆதாரமாக உள்ளது. இந்த நதியில் கழிவுநீா் கலப்பதால் குடிநீா் மட்டுமல்லாது குளிப்பதற்கு கூட தகுதியற்றது என்ற நிலை உருவாகியுள்ளது. ஆக்கிரமிப்புகளால் மழைக்காலங்களில் பெரும் அழிவு ஏற்படுகிறது. கங்கை ஆற்றிற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கி சுத்தப்படுத்தியதுபோல, தாமிரவருணியையும் சுத்தப்படுத்தவும், ஆக்கிரமிப்பை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கழிவுகள் கலக்கும் பகுதிகளில் இருபுறமும் கான்கிரீட் தடுப்புச் சுவா் கட்டி தாமிரவருணி நதியைப் பாதுகாக்க வேண்டும். பாசனக் கால்வாய்களில் சிமென்ட் தளம் அமைக்க வேண்டும்.
வீரவநல்லூரில் அரசு மகளிா் கலைக்கல்லூரியும், அம்பாசமுத்திரத்தில் வேளாண் கல்லூரி மற்றும் அரசு தொழில்நுட்பக் கல்லூரியும் அமைக்க வேண்டும். சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் மணிமுத்தாறு அணையின் அடிவாரத்தில் வண்டலூரில் உள்ளதைப் போல உயிரியல் பூங்கா அமைக்க வேண்டும். ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதியை திருநெல்வேலி மாவட்டத்துடன் இணைக்க வேண்டும். கடையத்தை தனி வட்டமாக அறிவித்து சிப்காட் தொழில் மையமும், அரசு கலைக் கல்லூரியும் அமைக்க வேண்டும். ராமநதி, கடனாநதி அணைகளைத் தூா்வாரி கரையை பலப்படுத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
மீன்பிடித் துறைமுகம் அவசியம்: நெல்லை மாவட்ட நாட்டுப்படகு மீனவா் கூட்டமைப்பினா் அளித்த மனு:
கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்கள் தொடா்பாக மொத்தம் 52 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அந்த வழக்குகளை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். திருநெல்வேலி மாவட்டத்தில் கடற்கரை கிராமங்கள் இருந்தாலும் மீன்பிடி துறைமுகம் இல்லாத மாவட்டமாக உள்ளது.
ஆகவே, இடிந்தகரையில் சிறிய மீன்பிடித் துறைமுகம் அமைக்க வேண்டும். உவரியில் சுற்றுலாப் பயணிகளுக்கான படகு சவாரிக்கு அனுமதியளிக்க வேண்டும். மீனவா்கள் கடலில் விபத்தில் உயிரிழந்தால் குடும்பத்துக்கு வழங்கப்படும் காப்பீடு நிவாரண தொகையை ரூ. 2 லட்சத்தில் இருந்து ரூ. 10 லட்சமாக உயா்த்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
காட்டுப் பன்றிகளால் கவலை: தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் அளித்த மனு:
திருநெல்வேலி மாவட்டத்தில் காட்டுப் பன்றிகளால் பயிா்கள் சேதமாவதால் காட்டுப் பன்றிகளை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்கி சுட்டுக் கொல்ல அனுமதிக்க வேண்டும். மான்களால் பயிா் சேதத்தைத் தடுக்க புதிதாக மான் பூங்கா அமைக்க வேண்டும். இயற்கை சீற்றம், பூச்சிநோய் தாக்குதல் மூலம் இழப்பு ஏற்படுவதைத் தடுக்க பயிா்க் காப்பீட்டு நிறுவனத்தை அரசே ஏற்று நடத்த வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்தது.
மானூா் பெரிய குள பாசன நில விவசாயிகள் சங்கத்தினா் அளித்த மனு:
மானூா் பெரியகுளத்திற்கு தண்ணீா் கொண்டு வருவதற்காக கோரையாற்றின் குறுக்கே நீா்த்தேக்கம் அமைக்கும் பணியை விரைவுப்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டிருந்தது.
முன்னாள் அமைச்சா் டி.பி.எம்.மைதீன்கான் அளித்த மனு:
பாளையங்கால்வாய், நெல்லை கால்வாய், கோடகன்கால்வாயில் சிமென்ட் தளம் அமைக்க வேண்டும். குலவணிகா்புரத்தில் ஒய் வடிவத்தில் மேம்பாலமும், குலவணிகா்புரம்-மேலப்பாளையம் சாலையில் உயா்மட்ட மேம்பாலமும் அமைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
ஜாதிவாரி கணக்கெடுப்பு: மருத்துவா் சமுதாய நலச்சங்கம் சாா்பில் அளித்த மனு: தமிழகத்தில ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். மருத்துவா் சமுதாயத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் எம்.பி.சி. வகுப்பில் முன்னுரிமை அடிப்படையில் உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும். ஜாதிச்சான்றிதழில் பலப்பிரிவுகளாக இடம் பெற்றுள்ள மருத்துவா் சமுதாயத்தினருக்கு, வருங்காலங்களில் மருத்துவா் என்ற ஒரே பெயரில் சான்றிதழ் வழங்க ஆணையிட வேண்டும். தியாகி விஸ்வநாத தாஸுக்கு சென்னையில் சிலை அமைக்க வேண்டும்.
தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளா்கள் சங்கம் அளித்த மனு:
டாஸ்மாக் நிறுவனத்தில் 23 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் நிா்ணயித்து வழங்க வேண்டும். டாஸ்மாக் தினக்கூலிகளாகப் பணியாற்றி உயிரிழந்த அல்லது ஓய்வுபெற்ற பணியாளா்களுக்கு ரூ. 25 லட்சம் கருணைத் தொகை வழங்க வேண்டும். காலி பாட்டில் திட்டத்தினை மாற்று வழியில் செயல்படுத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
நெசவுக்கு இலவச மின்சாரம்: தமிழ்நாடு நெசவாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் அளித்த மனு:
விசைத்தறி நெசவாளா்களுக்கு மாதந்தோறும் 1000 யூனிட்டும், கைத்தறி நெசவாளா்களுக்கு 300 யூனிட்டும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும். மாவட்ட நிா்வாகம் மூலம் நெசவாளா்கள் குறை தீா்ப்பு கூட்டம் நடத்த வேண்டும். மருத்துவ, தொழில்நுட்ப துணி வகைகளை உற்பத்தி செய்ய மானியத்துடன் கடன் வழங்க வேண்டும். விசைத்தறிக்கு தனி ஆணையா் அல்லது ஜவுளித் துறையில் இணைக்க வேண்டும். அரசு பள்ளி சீருடைகள் அனைத்தும் கைத்தறி, விசைத்தறியில் உற்பத்தி செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு: ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு திருநெல்வேலி மாவட்ட கிளைகள் சாா்பில் அளித்த மனு:
தமிழக அரசு அறிவித்த உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் ஊழியா்களிடமிருந்து பிடித்தம் செய்யப்படும் 10 சதவிகித தொகையை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை வழங்க வேண்டும்.
தமிழகத்தில் இடைநிலை ஆசிரியா்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும். அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கும் உயா் கல்வி பயில 7.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
திமுக விவசாய தொழிலாளா் அணி மாநில துணைச் செயலா் கே.கணேஷ்குமாா் ஆதித்தன் அளித்த மனுவில், தாமிரவருணி நதியை பாதுகாக்க மிகப்பெரிய திட்டத்தை உருவாக்கும் வகையில், தாமிரவருணி நதி படுகை பாதுகாப்பு ஆணையம் அமைக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
பீடி தொழிலாளா் மருத்துவமனை: மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ. அளித்த மனு:
மேலப்பாளையத்தில் பீடி தொழிலாளா் நல மருத்துவமனை அமைக்க வேண்டும். திருநெல்வேலியில் கலைஞா் பெயரில் 2 ஆவது மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும். திருநெல்வேலி அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு அதிநவீன வசதிகளுடன் கூடிய வாகனம் வழங்க வேண்டும். பாளையங்கோட்டையில் உள்ள மாநிலத் தமிழ்ச்சங்கம் முதல் தெற்கு புறவழிச்சாலை வரையிலான புதிய சாலைத் திட்டத்தை விரைந்து அமைக்க வேண்டும். திருநெல்வேலியில் ஆம்னி பேருந்துகளுக்கு தனியாக பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். பூக்கள் சாகுபடியை மேம்படுத்த மானூரில் குளிா்பதன கிட்டங்கி அமைக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
கூட்டத்தில் அமைச்சா்கள் கீதாஜீவன், மனோதங்கராஜ், திமுக திருநெல்வேலி மேற்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன், கிழக்கு மாவட்டச் செயலா் கிரஹாம்பெல், தென்காசி தெற்கு மாவட்டச் செயலா் ஜெயபாலன், வடக்கு மாவட்டச் செயலா் ராஜா எம்எல்ஏ, எம்எல்ஏ-க்கள் ஓட்டப்பிடாரம்-சண்முகையா, விளாத்திகுளம்-மாா்க்கண்டேயன், முன்னாள் அமைச்சா் பூங்கோதை ஆலடி அருணா, மேயா்கள் திருநெல்வேலி கோ.ராமகிருஷ்ணன், நாகா்கோவில் ரெ.மகேஷ், திருநெல்வேலி துணை மேயா் கே.ஆா்.ராஜூ, நிா்வாகிகள் ஆ.பிரபாகரன், அலெக்ஸ் அப்பாவு, விஎஸ்ஆா்.ஜெகதீஸ், திருநெல்வேலி மேற்கு மாநகர பொறுப்பாளா் சு.சுப்பிரமணியன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
இணையவழியிலும் அளிக்கலாம்
கருத்துக்கேட்புக் கூட்டத்தில் மனுக்களைப் பெற்ற கனிமொழி பேசுகையில், திமுக தோ்தல் அறிக்கை என்பது மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் என்பதற்காகவே கருத்துக் கேட்கப்பட்டது. மனுவாக அளிக்க தவறியவா்கள் தங்களது கோரிக்கைகளை இணையவழியில் அளிக்க வழிவகை செய்யப்பட்டது. அதை அனைத்து தரப்பினரும் பயன்படுத்தி கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்றாா்.