முகப்பு
கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழியில் ரயில் நிலைய சுரங்கப் பாதை மூடல்: விவசாயிகள் பாதிப்பு

ஆரல்வாய்மொழி ரயில் நிலையத்தையொட்டிய சுரங்கப் பாதையை ரயில்வே நிர்வாகம் மூடியதால்,  விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாமல் விவசாயிகள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:05 PM
பகிர்:

ஆரல்வாய்மொழி ரயில் நிலையத்தையொட்டிய சுரங்கப் பாதையை ரயில்வே நிர்வாகம் மூடியதால்,  விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாமல் விவசாயிகள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.
ஆரல்வாய்மொழி ரயில் நிலையம் நாகர்கோவில் - காவல் கிணறு தேசிய நெடுஞ்சாலையில் காவல் நிலையம் எதிரே உள்ளது. இந்த ரயில் நிலையத்துக்கு பின்புறம் உள்ள சுமார் 300 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இதில் பூ , தென்னை,  வாழை போன்ற பயிர்கள் குறிப்பிடத்தக்கவை. இங்கு காலையில் பூப்பறிக்கும் தொழிலில் சுமார் 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தத் தொழிலாளர்கள் பூந்தோட்டத்துக்கு செல்வதற்கு வசதியாக ரயில் நிலையத்தையொட்டி,  தண்டவாளத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்த சுரங்கப் பாதையைப் பயன்படுத்தி  வந்தனர்.
மேலும்,  தோட்ட வேலைக்காக கால்நடைகள் மற்றும் விவசாயப் பொருள்கள் ஏற்றுவதற்கான வாகனங்களையும் இப்பாதை வழியாகத்தான்  பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில்,  பராமரிப்புப் பணி மேற்கொள்வதாகக் கூறி,  சுரங்கப் பாதையை ரயில்வே அதிகாரிகள் தாற்காலிகமாக மூடினர். ஆனால், பராமரிப்புப் பணி நிறைவடைந்து பல நாள்களாகியும்,  அப்பாதையை மக்களின் பயன்பாட்டுக்கு திறந்துவிடாமல்,  பொக்லைன் இயந்திரம் உதவியுடன் பாதையை மூடிவிட்டனர். இதனால் விவசாயிகள் நிலங்களுக்குச் செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால்,  விவசாயிகள் தண்டவாளத்தை கடந்து செல்லும்போது விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது.
எனவே,  விவசாயிகள் நலன்கருதி,  சுரங்கப் பாதையை பயன்பாட்டுக்கு திறந்துவிட வேண்டும்; இல்லையெனில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என விவசாயிகள் தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →