முகப்பு
கன்னியாகுமரி

மணவாளக்குறிச்சி  இந்திய அரிய மணல் ஆலைக்கு சுற்றுச்சூழல் அனுமதி ஒப்புதல்: பொன். ராதாகிருஷ்ணன் தகவல்

குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி இந்திய அரிய மணல் ஆலைக்கு சுற்றுச்சூழல் அனுமதி ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Updated On : 9 ஏப்ரல், 2018 at 6:24 AM
பகிர்:

குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி இந்திய அரிய மணல் ஆலைக்கு சுற்றுச்சூழல் அனுமதி ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மணவாளக்குறிச்சியில் இயங்கும் இந்திய அரிய மணல் ஆலை இம்மாவட்டத்தில் இயங்கும் ஒரே பொதுத்துறை நிறுவனமாகும். இங்கு கடற்கரையில் கிடைக்கும் தாதுப் பொருள்களை மூலமாகக் கொண்டு பல அரிய மணல்கள் பிரித்தெடுக்கப்பட்டு வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. கடந்த ஓராண்டு காலமாக தமிழக அரசால் போக்குவரத்து அனுமதி வழங்கப்படாததால் இவ்வாலையில் இயக்கம் முற்றிலும் முடங்கியுள்ளது. 
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரை அழைத்துப் பேசி இவ்வாலை முடக்கப்படுவதை ஏற்றுக் கொள்ளமுடியாதென்றும், அதற்குரிய பரிந்துரைகளை மாநில அரசுக்கு அனுப்பி வைக்கவேண்டுமென்றும் அறிவுறுத்தினேன். மேலும் தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர்,  தமிழக முதன்மைச் செயலர் ஆகியோரை சந்தித்து இந்த ஆலையை, தொடர்ந்து இயக்குவதற்கு வழங்க வேண்டிய சான்றுகளை உடனடியாக வழங்க கேட்டுக் கொண்டதன் பேரில் தமிழக அரசால் சில ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. 
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தனை பாரதிய மஸ்தூர் சங்கத்தின் தமிழ் மாநிலப் பொதுச் செயலர்  முருகேசனுடன் நேரில் சந்தித்து அரிய மணல் ஆலை சம்பந்தமாக விளக்கிக் கூறி, சிஆர்இசட் அனுமதி சான்றிதழ் வாங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 
சுற்றுச்சூழல் அனுமதி பெற உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க மத்திய வனத்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டதன் பேரில் அரிய மணல் ஆலை அதிகாரிகளை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்து கொடுத்தேன். 
இந்நிலையில் நிர்வாகம் தொழிலாளர்களுக்கு தற்காலிக வேலை முடக்கம் கொடுப்பற்காக மத்திய தொழிலாளர் துறையிடம் அனுமதி கேட்டு மனு செய்திருப்பதாக அறிந்தவுடன் ஆலையில் தற்காலிக வேலை முடக்கத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது; ஆலை தொடர்ந்து செயல்பட வேண்டுமென்று மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்குவாரையும்,  மத்திய தொழிலாளர் துறை செயலரையும் நேரில் சந்தித்து கேட்டுக் கொண்டேன். மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் இந்த ஆலை தொடர்ந்து இயக்கப்படுவதற்கான அனுமதி அளிக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். 
இந்நிலையில் சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்கப் பெறாததால் தொழிலாளர்களுக்கு தற்காலிக வேலை முடக்கம் செயல்படுத்தப்படும் என அரிய மணல் ஆலை நிர்வாகத்தினர் தெரிவித்தனர். 
இதை அறிந்தவுடன் கடந்த 5ஆம் தேதி சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தனை சந்தித்து அன்றைய தினமே சுற்றுச்சூழல் அனுமதி ஒப்புதல் பெறப்பட்டுள்ளது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.