முகப்பு
கன்னியாகுமரி

களியக்காவிளை சோதனைச் சாவடியில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் சோதனை: ரூ. 84 ஆயிரம் பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில் உள்ள போக்குவரத்துத் துறை சோதனைச் சாவடி மற்றும் படந்தாலுமூடு காவல்துறை சோதனைச் சாவடிகளில் சனிக்கிழமை காலையில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் திடீர் சோதனை

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில் உள்ள போக்குவரத்துத் துறை சோதனைச் சாவடி மற்றும் படந்தாலுமூடு காவல்துறை சோதனைச் சாவடிகளில் சனிக்கிழமை காலையில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் திடீர் சோதனை மேற்கொண்டனர். 

இச் சோதனையின் போது கணக்கில் வராத ரூ. 84 ஆயிரத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்திலிருந்து கேரளம் செல்லும் வாகனங்கள் மற்றும் கேரளத்திலிருந்து தமிழகம் வரும் வாகனங்களுக்கு அனுமதிச்சீட்டு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக களியக்காவிளை போக்குவரத்துத் துறை சோதனைச் சாவடியில் அதிக கட்டணம் வசூலிப்பதாக, களியக்காவிளை அருகே படந்தாலுமூடு பகுதியில் உள்ள காவல்துறை சோதனைச் சாவடியில் பணிபுரியும் போலீஸார் குமரி மாவட்டத்திலிருந்து கேரளம் செல்லும் சரக்கு வாகன ஓட்டுநர்களிடமிருந்து கையூட்டு பெற்றுக் கொண்டு வாகனங்களை அனுமதிப்பதாகவும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு புகார்கள் வந்துள்ளன.

அதனடிப்படையில் நாகர்கோவில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு துணை கண்காணிப்பாளர் மதியழகன் தலைமையிலான போலீஸார் சனிக்கிழமை அதிகாலை 3.40 மணியிலிருந்து காலை 7.40 மணி வரை களியக்காவிளை போக்குவரத்து சோதனைச் சாவடியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் அங்கு கணக்கில் காட்டப்படாமல் வைத்திருந்த ரூ. 64,140 கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதே நேரத்தில்  படந்தாலுமூடு சோதனைச் சாவடியில் மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராமல் இருந்த ரூ. 20,700 கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
 
மேலும் களியக்காவிளை போக்குவரத்து சோதனைச் சாவடியில் பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணதாஸ், படந்தாலுமூடு காவல்துறை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த பேச்சிப்பாறை காவல் நிலையத்தைச் சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சுந்தர்ராஜ் ஆகியோர் மீது ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.