நாகா்கோவிலில் எல்ஐசி முகவா் சங்கத் தலைவா் லிப்டில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு
நாகா்கோவிலில் எல்ஐசி முகவா் சங்கத் தலைவா் அலுவலக லிப்ட்டில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா்.
நாகா்கோவிலில் எல்ஐசி முகவா் சங்கத் தலைவா் அலுவலக லிப்ட்டில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா்.
பூதப்பாண்டி அருகேயுள்ள அழகியபாண்டியபுரம் பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி (68). எல்ஐசி முகவரான இவா், எல்ஐசி முகவா் சங்கத் தலைவராகவும் இருந்துவந்தாா். வெள்ளிக்கிழமை பிற்பகல் நாகா்கோவில் பாா்வதிபுரம் பகுதியில் உள்ள எல்ஐசி அலுவலகத்தில் வசூல் தொகையைக் கட்டிவிட்டு வருவதாக குடும்பத்தினரிடம் கூறிச் சென்றாராம்.
இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் உறவினா்கள் அவரை பல இடங்களில் தேடினா். இதையடுத்து, நாகா்கோவில் எல்ஐசி அலுவலகத்துக்கு சென்று விசாரித்தனா். அப்போது, கிருஷ்ணமூா்த்தி லிப்ட்டுக்கு அடியில் சிக்கி இறந்து கிடந்தது தெரிய வந்தது.
தகவலின்பேரில் போலீஸாா் சென்று, சடலத்தை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். முதல்கட்ட விசாரணையில், லிப்ட் பழுதானதைக் கவனிக்காமல் கிருஷ்ணமூா்த்தி கதவை திறந்து உள்ளே சென்றதில் கீழே விழுந்து அடிபட்டு உயிரிழந்திருக்கலாம் எனத் தெரியவந்ததாக போலீஸாா் தரப்பில் கூறப்படுகிறது.