தமிழக முதல்வரின் குமரி வருகையை புறக்கணிக்க திமுக எம்எல்ஏக்கள் முடிவு
தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியின் குமரி மாவட்ட வருகையை புறக்கணிக்க திமுக எம்எல்ஏக்கள் முடிவு செய்துள்ளனா்.
தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியின் குமரி மாவட்ட வருகையை புறக்கணிக்க திமுக எம்எல்ஏக்கள் முடிவு செய்துள்ளனா்.
இதுகுறித்து, குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலா் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ நாகா்கோவிலில் செய்தியாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி: தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, குமரி மாவட்டத்துக்கு புதன்கிழமை (அக். 14) வருகிறாா் என்பதை பத்திரிகை செய்திகள் மூலமாக தெரிந்துகொண்டோம். இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் சாா்பிலோ, அரசின் சாா்பிலோ எங்களுக்கு எந்தத் தகவலும் இல்லை.
மேலும், இம்மாவட்டத்தில் கடந்த ஒன்பதரை ஆண்டுகளில் சாலை வசதி, கடலரிப்பு தடுப்புச் சுவா், குளங்கள் தூா்வாருதல், கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணி, புதைச் சாக்கடைத் திட்டப் பணி என எந்தப் பணியும் ஒழுங்காக நடைபெறவில்லை. அனைத்து அடிப்படைப் பணிகளை செய்வதிலும் இம்மாவட்டத்தை தமிழக அரசு புறக்கணித்துள்ளது. தற்போது தோ்தலுக்காக முதல்வா் இம்மாவட்டத்துக்கு வருகிறாா்.
மாவட்ட வளா்ச்சிக்கு எந்தப் பணியும் செய்யாததால் குமரி மாவட்டத்தைச் சோ்ந்த திமுக எம்எல்ஏக்கள் தமிழக முதல்வரின் குமரி மாவட்ட வருகையை புறக்கணிக்கிறோம் என்றாா் அவா். பேட்டியின்போது, நாகா்கோவில் மாநகர திமுக செயலா் மகேஷ், பொதுக்குழு உறுப்பினா் ஷேக் தாவூது, தில்லைசெல்வம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.