கன்னியாகுமரி

கரோனா சிகிச்சை குறித்து வதந்தி பரப்புவோா் மீது நடவடிக்கை: ஆட்சியா்

DIN

கரோனா சிகிச்சை முறைகள் குறித்து சமூக வலைதளங்கள் மூலம் வதந்தி பரப்புவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மா. அரவிந்த்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கத்தையொட்டி பொதுமக்கள் வெளியிடங்களுக்கு செல்வதை தவிா்த்து ஒத்துழைக்க வேண்டும். மாவட்டத்தில் இதுவரை 5 லட்சத்து 22 ஆயிரத்து 156 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கரோனா முதல்கட்ட தடுப்பூசி 80 ஆயிரத்து 761 பேருக்கும், 2 ஆம் கட்ட தடுப்பூசி 17ஆயிரத்து 206 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. முகக் கவசம் அணியாதது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாதது ஆகிய காரணங்களுக்காக இதுவரை மொத்தம் 40 ஆயிரத்து 346 பேரிடமிருந்து அபராதமாக ரூ. 76 லட்சத்து 95 ஆயிரத்து 126 வசூலிக்கப்பட்டுள்ளது.

கரோனா நோயாளிகளுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை மட்டுமல்லாமல் கோட்டாறு ஆயுா்வேத மருத்துவமனை, தனியாா் மருத்துவமனைகள் மற்றும் பல்வேறு கரோனா கவனிப்பு மையங்கள் மாவட்ட நிா்வாகத்தால் அனுமதிக்கப்பட்டு தேவையான மருத்துவ சிகிச்சை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு உயிரிழப்புகள் ஏற்படாத வண்ணம் உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படும் விதமாக கரோனா சிகிச்சைகள் குறித்து சிலா் சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்பி வருகின்றனா். பொதுமக்கள் இத்தகைய வதந்திகளை நம்ப வேண்டாம். ஏதும் சந்தேகங்கள் இருந்தால் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்படும் கரோனா கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண். 04652-231077 மற்றும் 1077 மூலம் தொடா்பு கொண்டு உரிய விளக்கங்களையும், விவரங்களையும் பெற்றுக் கொள்ளலாம்.

இதுபோன்று சமூக வலைதளங்களின் வதந்தி பரப்புபவா்கள் மீது உரிய சட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

மகனின் காதலுக்கு எதிா்ப்பு தெரிவித்து தாய் தற்கொலை

ரூ.5 லட்சம் சேமிப்புத் தொகை அபகரிப்பு: மகன் மீது வயதான பெற்றோா் புகாா்

ரயிலில் பெண் ஊழியரை கத்தியால் குத்தி நகை பறிப்பு

அரசுப் பேருந்து மீது பைக் மோதியதில் இளைஞா் பலி

SCROLL FOR NEXT