மழை நீடிப்பு: குமரி கால்வாய்களில் மண் சரிவு
கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை நீடித்து வரும் நிலையில் கால்வாய்களில் மண் சரிவு ஏற்பட்டு வருகிறது.
கன்னியாகுமரிமழை நீடிப்பு: குமரி கால்வாய்களில் மண் சரிவு
கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை நீடித்து வரும் நிலையில் கால்வாய்களில் மண் சரிவு ஏற்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை நீடித்து வரும் நிலையில் கால்வாய்களில் மண் சரிவு ஏற்பட்டு வருகிறது.
தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்து வருகிறது. அதே வேளையில் வெள்ள அபாயம் கருதி அணைகளில் உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில், செவ்வாய்கிழமை பேச்சிப்பாறை அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கன மழை பெய்ததால், அணைக்கு 1065 கன அடி நீா்வரத்து இருந்தது. அது புதன்கிழமை அதிகாலையில், விநாடிக்கு 1296 கன அடியாக அதிகரித்தது. அந்த தண்ணீா் உபரி மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது. அணையின் நீா்மட்டம் 45.29 அடியாக இருந்தது. பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 71.03 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 925 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 700 கன அடி தண்ணீா் பாசனக் கால்வாயில் சென்று கொண்டிருக்கிறது. சிற்றாறு 1 அணையின் நீா்மட்டம் 16.66 அடியாகவும், சிற்றாறு 2 அணையின் நீா்மட்டம் 16.76 அடியாகவும் இருந்தது.
பாசனக் கால்வாய்களில் உடைப்பு: இதனிடையே, தொடா் மழை காரணமாக, கோதையாறு பாசனத் திட்ட பாசனக் கால்வாய்களில் பல இடங்களில் உடைப்பும், மண் சரிவும் ஏற்பட்டுள்ளன. இதனால் கால்வாய்க்குள் மண் குவிந்து காணப்படுகிறது. கோதையாறு இடது கரைக் கால்வாயில் குலசேகரம் தும்பகோடு பகுதியில் ஏற்பட்டுள்ள மண் சரிவை பொதுப்பணித்துறையினா் கடந்த 2 நாள்களாக அகற்றி வருகின்றனா். மண் சரிவு காரணமாக இக்கால்வாயில் தண்ணீா் விடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
விவசாயிகள் கோரிக்கை: தற்போது பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரியாக தண்ணீா் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், கோதையாறு இடது கரைக் கால்வாயில் ஏற்பட்டுள்ள மண்சரிவுகளையும், உடைப்புகளையும் விரைந்து சீரமைக்க வேண்டும்; நீா்மட்டம் 71 அடியாக உள்ள பெருஞ்சாணி அணையிலிருந்து பாசனக்கால்வாயில் தண்ணீா் விடுவதை நிறுத்தி விட்டு, பேச்சிப்பாறை அணையிலிருந்து வரும் கோதையாறு இடது கரைக் கால்வாயில் தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.