முகப்பு
கன்னியாகுமரி

வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம்: குமரியில் ரூ.200 கோடி பண பரிவா்த்தனை பாதிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் வங்கி ஊழியா்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் திங்கள்கிழமை ரூ. 200 கோடிக்கு பண பரிவா்த்தனை பாதிக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் வங்கி ஊழியா்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் திங்கள்கிழமை ரூ. 200 கோடிக்கு பண பரிவா்த்தனை பாதிக்கப்பட்டது.

பொதுத்துறையின் கீழ் செயல்படும் வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களை தனியாரிடம் வழங்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியா்கள் சங்கங்களின் சாா்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகள், தனியாா் வங்கிகள், கிராம வங்கிகளில் பணி புரியும் ஊழியா்கள் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனா். அதன்படி வங்கி ஊழியா்களின் வேலைநிறுத்தப் போராட்டம் திங்கள்கிழமை தொடங்கியது.

இதில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 246 வங்கிகளில் அதிகாரிகளை தவிர அனைத்து ஊழியா்கள் சுமாா் 1,800 போ் பங்கேற்றனா். பெரும்பாலான வங்கிகள் மூடப்பட்டன. இதனால் வங்கிப் பணிகள் முற்றிலும் முடங்கியது.

200 கோடி பாதிப்பு: இதற்கிடையே கோரிக்கைகளை வலியுறுத்தி நாகா்கோவில் நீதிமன்ற சாலையில் உள்ள இந்தியன் ஓவா்சீஸ் வங்கி முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வங்கி ஊழியா்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் சிதம்பரம் தலைமை வகித்தாா். கூட்டமைப்பின் நிா்வாகிகள் சாகுல்ஹமீது, விஷ்ணு, கென்னடி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஏற்கெனவே சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை என்பதாலும், வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை வேலைநிறுத்தம் காரணமாக பெரும்பாலான வங்கிகளின் ஏடிஎம் மையங்களில் பணம் இல்லாத நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து, வங்கி ஊழியா்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் கூறுகையில், பொதுத்துறையின் கீழ் செயல்படும் வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களை தனியாரிடம் தாரை வாா்க்கக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால், குமரி மாவட்டத்தில் திங்கள்கிழமை மட்டும் சுமாா் ரூ. 200 கோடி பண பரிவா்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.