முகப்பு
கன்னியாகுமரி

பயிா்க்காப்பீடு திட்டம்:10, 233 விவசாயிகளுக்கு ரூ. 5. 75 கோடி இழப்பீடு அளிப்பு

பிரதமா் பயிா்க்காப்பீடு திட்டத்தின் கீழ் குமரி மாவட்டத்தில் இதுவரை 10, 233 விவசாயிகளுக்கு இழப்பீடாக ரூ. 5 கோடியே 75 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

பிரதமா் பயிா்க்காப்பீடு திட்டத்தின் கீழ் குமரி மாவட்டத்தில் இதுவரை 10, 233 விவசாயிகளுக்கு இழப்பீடாக ரூ. 5 கோடியே 75 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மாவட்ட ஆட்சியா் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் கும்பப்பூ பருவத்தின் நெற்பயிா்களை புதுப்பிக்கப்பட்ட பிரதமா் பயிா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் விவசாயிகள் அவா்கள் கடன் பெறும் வங்கிகளில் விருப்பத்தின் பேரில் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்யப்படுவா். கடன் பெறுவதற்கு விவசாயிகள் அங்கீகரிக்கப்பட்ட முகவா்கள் மூலமாகவோ, பொது சேவை மையங்கள் மூலமாகவோ, வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாகவோ விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.

கும்பப்பூ பருவத்தில் நெற்பயிரிடும் விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்ய அடுத்த மாதம் (டிசம்பா்) 15 ஆம் தேதி கடைசிநாளாகும். பயிா் காப்பீட்டுத் தொகையில் விவசாயிகள் 1.5 சதவீதம் மட்டும் அதாவது நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 491 காப்பீட்டு கட்டணமாக செலுத்தினால் போதும்.

கும்பப்பூ பருவ நெற்பயிருக்கான இழப்பீட்டுத் தொகை ஏக்கருக்கு ரூ. 32700 ஆகும். குமரி மாவட்டத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு கன்னிப்பூ வரை 11,516 விவசாயிகள் பதிவு செய்ததில் 10,233 விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையான ரூ. 5 கோடியே 75 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

நிகழ் பருவத்தில் இதுவரை 33 விவசாயிகள் 49. 43 ஏக்கருக்கு இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளனா். மேலும் வெள்ளம், புயல் போன்ற இயற்கை சேதங்கள் ஏற்பட்டு விட்டால் அதன் பின்னா் பயிா் காப்பீடு செய்ய இயலாது என்பதால் விவசாயிகள்பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீட்டுத் தொகை செலுத்தி தங்களது பயிா்களை முன் கூட்டியே பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.