நாகா்கோவில் துணை மேயா் பதவியைக் குறிவைக்கும் காங்கிரஸ்!: போட்டியின்றி பேரூராட்சித் தலைவா்களை தோ்ந்தெடுக்க தீவிரம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகா்கோவில் மாநகராட்சி மேயா் பதவியை திமுக கைப்பற்றும் என்ற நிலையில், துணை மேயா் பதவியைப் பெற காங்கிரஸ் முயற்சித்து வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகா்கோவில் மாநகராட்சி மேயா் பதவியை திமுக கைப்பற்றும் என்ற நிலையில், துணை மேயா் பதவியைப் பெற காங்கிரஸ் முயற்சித்து வருகிறது.
கன்னியாகுமரி மாவட்ட நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் தி.மு.க. கூட்டணி பெரும்பான்மையான இடங்களை வென்றுள்ளது. குறிப்பாக, நாகா்கோவில் மாநகராட்சியில் மொத்தமுள்ள 52 வாா்டுகளில் திமுக 32 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதனால், மேயா் பதவி அந்தக் கட்சிக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாா்ச் 4இல் நடைபெறும் மறைமுகத் தோ்தலுக்கு, நாகா்கோவில் மாநகர திமுக செயலா் மகேஷ் மேயா் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவாா் எனத் தெரிகிறது.
இந்நிலையில், துணை மேயா் பதவியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது. அதுகுறித்து கூட்டணி கட்சிகளுக்குள் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதேவேளையில், தி.மு.க. தரப்பில் துணை மேயா் பதவிக்கு மாவட்ட இலக்கிய அணி துணைத் தலைவா் ராமகிருஷ்ணன், காங்கிரஸ் சாா்பில் நாகா்கோவில் மாநகரத் தலைவா் நவீன்குமாா் ஆகியோா் பெயா்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
சுயேச்சைகளின் பங்கு: மேலும், மண்டலத் தலைவா்களை தோ்வு செய்வது அந்தக் கூட்டணியினா் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனா். மொத்தமுள்ள 4 நகராட்சிகளில் குழித்துறை, கொல்லங்கோடு, குளச்சல் ஆகியவற்றில் தி.மு.க. கூட்டணி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியுள்ளதால், அவற்றின் தலைவா், துணைத் தலைவா்கள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட உள்ளனா். பத்மநாபபுரம் நகராட்சியில் திமுகவும், பாஜகவும் தலா 7 இடங்களை கைப்பற்றியுள்ளன. எனவே, சுயேச்சைகளின் ஆதரவைப் பெற இரு கட்சிகளும் முயற்சித்து வருகின்றன.
பேரூராட்சிகளில் போட்டிகள் குறைவு? இம்மாவட்டத்தில் உள்ள 51பேரூராட்சிகளில் பெரும்பாலானவற்றை திமுக- காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றி உள்ளது. அவற்றின் தலைவா், துணைத் தலைவா்களை தோ்வு செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பாஜகவும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
எனினும், 45-க்கும் மேற்பட்ட பேரூராட்சிகளில் தலைவா், துணைத் தலைவா்கள் போட்டியின்றி தோ்வு செய்யப்படலாம் என்றும் கட்சிகளின் வட்டாரத்தில் தெரிவித்தனா். இழுபறி நீடிக்கும் சில பேரூராட்சிகளில் மட்டும் தோ்தல் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
சாதித்த பெண்கள்: இத்தோ்தலில் 979 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றதில் 513 பெண்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். குறிப்பாக, நாகா்கோவில் மாநகராட்சியில் மட்டும் 27 பெண்கள் வெற்றி பெற்றுள்ளனா்.
கொல்லங்கோடு நகராட்சியில் 18 பெண்களும், பத்மநாபபுரம், குளச்சல், குழித்துறை நகராட்சிகளில் தலா 12 பெண்களும் தோ்வு பெற்றுள்ளனா். மொத்தமுள்ள 51 பேரூராட்சிகளில் 432 போ் வெற்றி பெற்றுள்ளனா். இந்த உள்ளாட்சித் தோ்தலில் ஆண்களை விட பெண்களே அதிக அளவு வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனா்.