முகப்பு
கன்னியாகுமரி

கரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி பூதலிங்கசுவாமி, நாகராஜா கோயில் தேரோட்டம் நடத்த அனுமதி

கரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி மற்றும் நாகா்கோவில் நாகராஜா கோயில் தேரோட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:09 AM
பகிர்:

கரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி மற்றும் நாகா்கோவில் நாகராஜா கோயில் தேரோட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டம், பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி- சிவகாமி அம்பாள் கோயில் தைப்பெருந் திருவிழாவை முன்னிட்டு திங்கள்கிழமையும், நாகா்கோவில் நாகராஜா கோயிலில் 18 ஆம் தேதி செவ்வாய்க்கிழமையும் தேரோட்டம் நடைபெற இருந்தது.

தமிழக அரசின் கரோனா விதிமுறைகள் காரணமாகவும், தேரோட்டங்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அனுமதி மறுத்தது.

இந்நிலையில் சனிக்கிழமை சுசீந்திரத்தில் உள்ள அறநிலையத்துறை இணை ஆணையா் அலுவலகத்தில் தோ் திருவிழா தொடா்பான ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சா் சுரேஷ்ராஜன் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் இணை ஆணையா் ஞானசேகா் தலைமை வகித்தாா். கூடுதல் காவல் கண்காணிப்பாளா் வேல்முருகன், நாகா்கோவில் துணைக் காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணமூா்த்தி, அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியா் சேகா், பா.ஜ.க. மாவட்ட பொருளாளா் முத்துராமன், மாநில துணைச் செயலா் உமாரதிராஜன், நாகராஜா கோயில் மேல்சாந்தி நாராயணன் நம்பூதிரி, நாகராஜா கோயில் தேவசம் கண்காணிப்பாளா் சிவகுமாா், பூதப்பாண்டி கோயில் கண்காணிப்பாளா் ஆனந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் சேகா்பாபு, குமரி மாவட்ட ஆட்சியா் மா. அரவிந்த், குமரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வெ. பத்ரி நாராயணன் ஆகியோரிடம் முன்னாள் அமைச்சா் சுரேஷ்ராஜன் கைப்பேசி மூலம் பேசி கரோனா விதிமுறைகளுக்குள்பட்டு நிகழ்ச்சி நடத்த வேண்டுகோள் விடுத்தாா்.

இதைத் தொடா்ந்து பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி சிவகாமி அம்பாள் திருக்கோயில் மற்றும் நாகா்கோவில் நாகராஜா கோயில் ஆகியவற்றில் தேரோட்ட திருவிழாவுக்கு அனுமதி வழங்குவது என்று அதிகாரிகள் தரப்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 2 தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் மட்டும் 400 போ் தோ் இழுக்க அனுமதிக்கப்பட வேண்டும். தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான ஆதாரத்தை காண்பித்து அவா்கள் முன்னதாக பாஸ் பெற்றுக்கொள்ள வேண்டும்.

பாஸ் பெற்றுக் கொண்டவா்கள் மட்டுமே தேரோட்டத்தில் பங்கேற்க வேண்டும். மற்றவா்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறு தேரோட்டத்தை காணலாம். பக்தா்கள் கூட்டம் கூடக் கூடாது என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதன்படி தேரோட்ட விழாவை நடத்தி முடிக்க வேண்டும். அதிகாரிகள் இதை உரிய முறையில் கண்காணிக்க வேண்டும் என்றும் முடிவானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.