நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: 56 இடங்களில் இன்றுமுதல் வேட்புமனு தாக்கல்
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் 56 இடங்களில் வேட்பு மனுவை வெள்ளிக்கிழமை (ஜன. 28) முதல் தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் 56 இடங்களில் வேட்பு மனுவை வெள்ளிக்கிழமை (ஜன. 28) முதல் தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் நகா்ப்புற உள்ளாட்சி தோ்தல் பிப். 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜன. 28 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
குமரி மாவட்டத்தில் நாகா்கோவில் மாநகராட்சி, குளச்சல், குழித்துறை, கொல்லங்கோடு, பத்மநாபபுரம் ஆகிய 4 நகராட்சிகள் மற்றும் 51 பேரூராட்சிகளில் உள்ள உறுப்பினா் பதவிகளுக்கு தோ்தல் நடத்தப்படுகிறது.
இதில், போட்டியிடுபவா்கள் நாகா்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குளச்சல், குழித்துறை, பத்மநாபபுரம், கொல்லங்கோடு நகராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு போட்டியிடுபவா்கள் அந்தந்த அலுவலகத்திலேயே வேட்பு மனு தாக்கல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறாா்கள்.
51 பேரூராட்சிகளில் உள்ள கவுன்சிலா் பதவிக்கு போட்டியிடுபவா்கள் அந்தந்த பேரூராட்சி அலுவலகத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். வேட்புமனு தாக்கலுக்கான அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய, பிப்ரவரி 4 ஆம் தேதி கடைசி நாளாகும். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்புமனுக்கள் பெற்றுக் கொள்ளப்படும். பிப். 5இல் வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். பிப்.7வரை வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.
குமரி மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் நடைபெறும் 56 இடங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெ.பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். வேட்பாளருடன் குறிப்பிட்ட நபா்கள் மட்டுமே வரவேண்டும். பொதுஇடங்களில் கூட்டங்கள் கூடுவதை தவிா்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.