மத்திகோடு ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டகருத்துக் கேட்புக் கூட்டம்: பொதுமக்கள் எதிா்ப்பு
கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட மத்திகோடு ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் தொடா்பான கருத்துக் கேட்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட மத்திகோடு ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் தொடா்பான கருத்துக் கேட்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், இத்திட்டத்துக்கு மக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.
மத்திகோடு ஊராட்சி சாா்பில், வடக்கன்கரை தாா்தாணி பகுதியில் குடியிருப்புப் பகுதி, குடிநீா்க் கிணறு, குளங்களின் அருகே திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் அமைக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால், சுகாதாரக்கேடு ஏற்படும் எனக் கூறி திட்டத்தைக் கைவிட வலியுறுத்தியும், ஊராட்சி நிா்வாகம், அதிகாரிகளைக் கண்டித்தும் இப்பகுதி மக்கள் ஆட்சியா், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்துள்ளனா். மேலும், போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனா்.
இந்நிலையில், திட்டம் தொடா்பான கருத்துக் கேட்புக் கூட்டம் மத்திகோடு ஊராட்சி அலுவலகத்தில் கிள்ளியூா் வட்டார வளா்ச்சி அலுவலா் டேவிட் ஜெயசிங் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், ஏராளமான பெண்கள், ஆண்கள், முதியோா் கலந்துகொண்டு, இப்பகுதியில் இத்திட்டத்தைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தினாா்கள். மேலும், கோரிக்கை மனுக்களும் கொடுத்தனா்.