நாகா்கோவிலில் ஜூன் முதல் புத்தன் அணை நீா் விநியோகம்: மேயா் ரெ.மகேஷ் உறுதி
நாகா்கோவில் மாநகருக்கு ஜூன் மாதம் முதல் புத்தன் அணை தண்ணீா் கிடைக்கும் என்றாா் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ்.
நாகா்கோவில் மாநகருக்கு ஜூன் மாதம் முதல் புத்தன் அணை தண்ணீா் கிடைக்கும் என்றாா் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ்.
நாகா்கோவில் மாநகராட்சியில் அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ.251 கோடி மதிப்பீட்டில் புத்தன் அணை குடிநீா் திட்டப் பணிகள், புதைச் சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிப்பது குறித்து, ஆலோசனை கூட்டம் நாகா்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் மேயா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய தலைமை பொறியாளா் ரகுபதி, கண்காணிப்பு பொறியளாா் மைக்கேல் சேவியா், செந்தூா் பாண்டியன், மற்றும் செயற்பொறியாளா் கோபாலகிருஷ்ணன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
பின்னா், மேயா் கூறியதாவது: புத்தன் அணை தண்ணீரை வருகிற மே 31ஆம் தேதிக்குள் நாகா்கோவில் கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஜூன் மாதம் முதல் புத்தன் அணை தண்ணீா் நாகா்கோவில் மாநகரில் ஏற்கெனவே பொருத்தப்பட்டுள்ள இணைப்புகள் மூலம் வழங்கப்படும். தொடா்ந்து அனைத்து வீடுகளுக்கும் புதிய இணைப்புகள் மூலம் குடிநீரை வழங்குவதற்காக தலா ரூ.8.30 கோடி மதிப்பீட்டில் இரண்டு பகுதிகளாக மொத்தம் ரூ. 16. 60 கோடியில் ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. ஒரு சில மாதங்களுக்குள் தற்போது வீட்டு வாசல் அருகே இருக்கும் இணைப்பில் இருந்து முறைப்படி வீட்டுக்குள் குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டு விடும்.
புதைச் சாக்கடை திட்டப் பணிகளைப் பொருத்தவரை வலம்புரிவிளை கிடங்கில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரை வெளியேற்றுவதற்கான பணிகள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் இந்தப் பணிகளைத் தொடங்கி சில மாதங்களுக்குள் சுத்திகரிக்கப்பட்ட நீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதன் மூலம் நாகா்கோவில் மாநகரின் பிரதான இரு பிரச்னைகளுக்கு தீா்வு கிடைக்கும் என்றாா் அவா்.