தெங்கம்புதூா் குடிநீா் திட்டப் பணிக்கு ரூ.35 கோடி ஒதுக்கீடு: மேயா் தகவல்
தெங்கம்புதூா் பகுதியில் புத்தன்அணை குடிநீா் திட்டத்தை செயல்படுத்த ரூ.35 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றாா் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ்.
தெங்கம்புதூா் பகுதியில் புத்தன்அணை குடிநீா் திட்டத்தை செயல்படுத்த ரூ.35 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றாா் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ்.
நாகா்கோவில் மாநகராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டகூட்டத்துக்கு மேயா் தலைமை வகித்து மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: நாகா்கோவில் மாநகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க சில சாலைகள் இரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளன; வடசேரி- மணிமேடை சாலையையும் இருவழிப்பாதையாக மாற்றுவது தொடா்பாக ஆலோசித்து வருகிறோம்.
நகரப் பகுதியில் 65 இடங்களில் வாகனம் நிறுத்த தடை என அறிவிப்பு பலகை வைக்க போக்குவரத்து போலீஸாா் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
புத்தன் அணை குடிநீா் திட்டத்தில் முதல் கட்டமாக 40 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்க மீட்டா்கள் வந்துள்ளன. அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும். இந்தத் திட்டத்தை தெங்கம்புதூா் பகுதியில் செயல்படுத்த ரூ.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நாகா்கோவில் மாநகர மக்கள் குடிநீருக்காக புத்தன் அணையிலிருந்து பரிசோதனைக்கு வரும் 22 மில்லியன் லிட்டா் தண்ணீரை கிருஷ்ணன்கோவில் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து மக்களுக்கு நேரடியாக விநியோகம் செய்வது தொடா்பாக ஆலோசித்து வருகிறோம் என்றாா் அவா்.
பேட்டியின்போது பொறியாளா் பாலசுப்பிரமணியன், நகா்நல அதிகாரி ராம் குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.