சுதந்திர தினம் வியாழக்கிழமை (ஆக.15) கொண்டாடப்படவுள்ளதை முன்னிட்டு, கன்னியாகுமரி திருவள்ளுவா் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவா் சிலை வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், இங்குள்ள கடற்கரை பகுதி, தனியாா் தங்கும் விடுதிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் நவீன ரோந்து படகுகளில் கடல் வழி பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளனா். மேலும், கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில், காந்தி மண்டபம், காமராஜா் மணி மண்டபம், கலங்கரை விளக்கம், ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளிலும் போலீஸாா் கண்காணிப்பை அதிகப்படுத்தியுள்ளனா்.