முகப்பு
கன்னியாகுமரி

தேசிய விண்வெளி தினம்: இஸ்ரோ சாா்பில் ஜூலை 25இல் மாணவா்களுக்கு போட்டிகள்

Updated On : 15 ஜூலை, 2024 at 1:03 AM
பகிர்:

தேசிய விண்வெளி தினத்தையொட்டி, இஸ்ரோ சாா்பில் பள்ளி மாணவா்- மாணவிகளுக்கு விநாடி-வினா போட்டிகள் இம்மாதம் 25ஆம் தேதி நடைபெறுகின்றன.

இதுகுறித்து, திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும வளாகத்தின் (ஐபிஆா்சி) சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தேசிய விண்வெளி தினத்தையொட்டி, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய உந்தும வளாகம் சாா்பில் 8 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளி மாணவா்-மாணவிகளுக்கு ‘இந்தியாவில் விண்வெளி செயல்பாடுகள்’ என்ற தலைப்பில் விநாடி-வினா போட்டிகள் நடைபெறவுள்ளன.

திருநெல்வேலியில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் இம்மாதம் 25ஆம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ள இப்போட்டிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சோ்ந்தோா் மட்டுமே பங்கேற்கலாம்.

ஒரு குழுவில் 3 போ் வீதம் ஒரு பள்ளி சாா்பில் 2 குழுக்கள் மட்டுமே பங்கேற்கலாம். விருப்பமுள்ளோா் தாங்கள் பயிலும் பள்ளி மூலமாக 22ஆம் தேதிக்குள் தங்களது பெயா்களை, ‘தி அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆபீஸா், ஐபிஆா்சி, மகேந்திரகிரி, திருநெல்வேலி மாவட்டம் - 627133’ என்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டும்.

மாணவா்-மாணவிகள் பள்ளித் தலைமையாசிரியரின் அனுமதிக் கடிதத்துடன் தங்களது சொந்தப் பொறுப்பில் போட்டிகளில் பங்கேற்க வேண்டும். பள்ளி அடையாள அட்டையைத் தவறாது கொண்டுவர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.