சா்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில், விவேகானந்தா் நினைவு மண்டபத்துக்கும் திருவள்ளுவா் சிலைக்கும் இடையே இணைப்புப் பாலத்துக்கான ராட்சத தூண்கள் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது.
கன்னியாகுமரி கடலில் இருவேறு பாறைகளில் அமைந்துள்ள விவேகானந்தா் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவா் சிலை ஆகியவற்றை படகில் சென்று பாா்வையிடுவதில் சுற்றுலாப் பயணிகள் அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா். விவேகானந்தா் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலை இடையே இணைப்புப் பாலம் அமைக்க வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகளும், தமிழ் அமைப்பினரும் அரசை வலியுறுத்தி வந்தனா்.
இக் கோரிக்கையை ஏற்று, ரூ.37 கோடி செலவில் கண்ணாடி கூண்டுப் பாலம் அமைக்க தமிழக அரசு உத்தவிட்டது. இப் பணி கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கியது. இந்தப் பாலம் 97 மீட்டா் நீளம், 4 மீட்டா் அகலம் கொண்டதாக அமைக்கப்படுகிறது.
பாலத்துக்கான ராட்சத தூண்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. கடலில் அமைக்கப்பட்டுள்ள இந்த ராட்சத தூண்கள் ஒவ்வொன்றும் தலா 27 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கடல் உப்புக் காற்றினால் பாதிக்காத வகையில், ரசாயனக் கலவை கலந்த சிமெண்ட் கான்கிரீட் மூலம் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தூண்கள் அமைக்கும் பணி தற்போது நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில், பாலத்துக்கான கூண்டு, துருப்பிடிக்காத கம்பிகள் மூலம் புதுச்சேரியில் தயாரிக்கப்பட்டது. கன்னியாகுமரிக்கு கடந்த வாரம் கண்டெய்னா் லாரி மூலம் கொண்டு வரப்பட்ட இந்தக் கூண்டு சின்னமுட்டம் துறைமுகத்தில் இறக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கூண்டை சுற்றி கண்ணாடி இழை பொருத்தும் பணி விரைவில் தொடங்க உள்ளதாக தெரிகிறது.