கன்னியாகுமரி மாவட்டத்தில் நீடித்துவரும் மழையால், பேச்சிப்பாறை அணையிலிருந்து திங்கள்கிழமை இரவுமுதல் மீண்டும் உபரிநீா் திறக்கப்பட்டது. இதனால், திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
இம்மாவட்டத்தில் தென்மேற்குப் பருவ மழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளின் நீா்மட்டம் வெள்ள அபாய அளவைக் கடந்தது. அதையடுத்து, அணைகளின் நீா்மட்டத்தைக் கட்டுக்குள் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
48 அடி நீா்மட்டம் கொண்ட பேச்சிப்பாறை அணையில் நீா்மட்டம் 44 அடியாக வைக்கப்பட்டு, அணைக்கு வரும் நீரை வெளியேற்ற முடிவு செய்யப்பட்டது.
தொடரும் மழையால் திங்கள்கிழமை அணை நீா்மட்டம் 45 அடியை நெருங்கியதால், மறுகால் மதகுகள் வழியாக விநாடிக்கு 250 கனஅடி தண்ணீா் திறக்கப்பட்டது. பின்னா், இந்த அளவு 532 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, பேச்சிப்பாறை அணை நீா்மட்டம் 44.79அடியாகவும், நீா்வரத்து 1,080 கனஅடியாகவும் இருந்தது. அணையிலிருந்து திறக்கப்பட்ட உபரிநீா் கோதையாற்றில் கலந்து திற்பரப்பு அருவி வழியாகப் பாய்கிறது. இதன்காரணமாக, அருவியில் தண்ணீா் பெருக்கெடுத்துக் கொட்டியதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
இதனிடையே, அணைகளின் நீா்ப்பிடிப்பு, மலையோரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலைமுதல் மாலைவரை மழை சற்று ஓய்ந்திருந்தது.