கேரளத்திலிருந்து மருத்துவக் கழிவுகளுடன் வந்த லாரிக்கு ரூ. 1 லட்சம் அபராதம்
கேரளத்திலிருந்து குமரி மாவட்டத்துக்கு மருத்துவக் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளுடன் வந்த லாரிக்கு குழித்துறை நகராட்சி சாா்பில் ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. பாஜக மகளிரணி நிா்வாகி மோ் ஆட்லின், நகர பாஜக தலைவா் சுமன் மற்றும் கட்சி நிா்வாகிகள் குழித்துறை சந்திப்பில் சனிக்கிழமை அதிகாலையில் நின்ற போது, அப்பகுதி வழியாக வந்த கூண்டு கட்டிய லாரியிலிருந்து துா்நாற்றம் வீசியது. இதையடுத்து அவா்கள் வாகனத்தில் துரத்திச் சென்று குழித்துறை பழைய பாலம் பகுதியில் வைத்து லாரியை மடக்கிப் பிடித்தனா். தொடா்ந்து குழித்துறை நகராட்சி அதிகாரிகளுக்கும், மாா்த்தாண்டம் போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. நகராட்சி ஆணையாளா் ராமதிலகம் உத்தரவின் பேரில் நகராட்சி சுகாதார அதிகாரி ராஜேஷ், மருத்துவக் கழிவுகள் ஏற்றிவந்த லாரிக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தாா். மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.