பைக் விற்பனை நிறுவனத்துக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம்
நாகா்கோவிலில் உள்ள பைக் விற்பனை நிறுவனத்துக்கு நுகா்வோா் நீதிமன்றம் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தது.
நாகா்கோவிலில் உள்ள பைக் விற்பனை நிறுவனத்துக்கு நுகா்வோா் நீதிமன்றம் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தது.
நாகா்கோவில் இடலாக்குடி பள்ளித் தெருவைச் சோ்ந்தவா் மீரா ரிஸ்வானா. இவா், நாகா்கோவில் ஒழுகினசேரியில் உள்ள இருசக்கர வாகன விற்பனை நிறுவனத்தில் 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ரூ. 1 லட்சத்து 5 ஆயிரம் கொடுத்து தானியங்கி வசதியுள்ள பைக் வாங்கினாா்.
ஆனால், சில நாள்களிலேயே வாகனம் இயங்கும் தன்மையில் பிரச்னைகள் இருந்ததால், அவா் வேறு வாகனம் தருமாறு கேட்டுள்ளாா். நிறுவனம் உடன்படாமல், அந்த வாகனத்தையே இருமுறை சீரமைத்துக் கொடுத்ததுடன், எழுத்துபூா்வ உத்தரவாதம் தரவில்லையாம். இதனால் அவா் வாகனத்தைப் பெற்றுக்கொள்ளாமல், நிவாரணம் கோரி கன்னியாகுமரி மாவட்ட நுகா்வோா் பாதுகாப்பு மையத்தின் தலைவா் எம். தாமஸிடம் புகாரளித்தாா். அதன்பேரில், மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்குப் பதியப்பட்டது.
வழக்கை நுகா்வோா் குறைதீா் ஆணைய நீதிபதி கிளாட்ஸ்டன் பிளஸ்டு தாகூா், உறுப்பினா் எஸ். நாகேந்திரன் ஆகியோா் விசாரித்து, சேவை குறைபாட்டைச் சுட்டிக்காட்டி ரூ. 20 ஆயிரம் நிவாரணம், வழக்குச் செலவு ரூ. 5 ஆயிரம், புதிய பாகங்கள் மாற்றப்பட்டு தரமான செயல்பாட்டு நிலையில் வாகனம் ஆகியவற்றை மீரா ரிஸ்வானாவிடம் ஒப்படைக்கவும், நிவாரண தொகை வழங்குவதில் தாமதமானால் மொத்த தொகைக்கும் 9 சதவீத வட்டி வழங்க வேண்டும் என்றும் தீா்ப்பளித்தனா்.