முகப்பு
கன்னியாகுமரி

அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்க வலியுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்களுக்கும் தமிழ்நாடு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Updated On : 16 அக்டோபர், 2024 at 11:09 PM
செய்தியாளா்களிடம் பேசிய சிறுபான்மை, சிறுபான்மையல்லாத அரசு உதவி பெறும் பள்ளிகளின் உரிமை மீட்புக் குழு மாநிலச் செயலா் டி. கனகராஜ்.
பகிர்:

அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்களுக்கும் தமிழ்நாடு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சிறுபான்மை, சிறுபான்மையல்லாத அரசு உதவி பெறும் பள்ளிகளின் உரிமை மீட்புக் குழு மாநிலச் செயலா் டி. கனகராஜ் நாகா்கோவிலில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியது:

தமிழகத்தின் கல்வி வளா்ச்சியில் அரசுப் பள்ளிகளுக்கு இணையாக அரசு உதவி பெறும் பள்ளிகளும் பெரும் பங்காற்றியுள்ளன. அவற்றுள் மொழிவழி சிறுபான்மை, மதவழி சிறுபான்மை, சிறுபான்மை அல்லாத பள்ளிகளும் அடங்கும். அரசுப் பள்ளிகளுக்கு முன்பாகவே அடித்தட்டு மக்களுக்குக் கல்வியைக் கொண்டுசோ்த்த பெருமை உதவி பெறும் பள்ளிகளையே சேரும்.

கடந்த காலங்களில் தமிழக அரசும் இக்கல்வி நிலையங்களை முழுமையாக ஆதரித்து வந்துள்ளது. தமிழகத்தில் 8,403 நிதியுதவி பெறும் தொடக்க, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் சுமாா் 28.5 லட்சம் போ் படிக்கின்றனா். இலவச மதிய உணவு, சைக்கிள், மடிக்கணினி வழங்குதல் உள்ளிட்ட நலத்திட்டங்கள் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் சோ்த்தே நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு அரசின் நலத்திட்டங்கள் மறுக்கப்படுகின்றன.

அரசின் இந்நிலைப்பாட்டைக் கண்டிக்கிறோம். 7.5 சதவீத இடஒதுக்கீடு உள்ளிட்ட அரசுப் பள்ளி மாணவா்களுக்கான அனைத்து நலத்திட்டங்களை அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். மாணவா் எண்ணிக்கைக்கேற்ப அரசு அனுமதித்த காலிப் பணியிடங்களில் நியமிக்கப்பட்டு ஊதியமின்றி பணியாற்றும் ஆசிரியா்கள், ஆசிரியரல்லாப் பணியாளா்களுக்கு நியமன ஏற்பளிப்பு அளித்து ஊதியம் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, முதல் கட்டமாக மாநிலம் தழுவிய கையெழுத்து இயக்கம் நடைபெற்றுவருகிறது. இப்பிரதிகள் அந்தந்த மாவட்ட ஆட்சியா்களிடம் வெள்ளிக்கிழமை (அக். 18) மாலை 5 மணிக்கு ஒப்படைக்கப்படும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் காலியாக உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியா் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகம் முன் வியாழக்கிழமை (அக். 17) மாலை 5 மணிக்கு காத்திருப்புப் போராட்டம் நடைபெறும் என்றாா் அவா்.

தமிழ்நாடு அரசு உதவிபெறும் தனியாா் பள்ளி ஆசிரியா் அலுவலா் கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் கண்ணன், மாவட்டத் தலைவா் ரைமண்ட், செயலா் டோமினிக்ராஜ், காா்மல் பள்ளித் தாளாளா் வின்சென்ட் அமல்ராஜ், முன்னாள் தலைவா் விஜயராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.