கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் சீற்றம்: அழிக்கால், பிள்ளைத்தோப்பு பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்த கடல் - நீா்பொதுமக்கள் அவதி
கன்னியாகுமரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள அழிக்கால், பிள்ளைத்தோப்பு பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் கடல்நீா் புகுந்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள அழிக்கால், பிள்ளைத்தோப்பு பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் கடல்நீா் புகுந்தது.
கன்னியாகுமரி மாவட்ட கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு மாவட்டத்தின் கடலோரப் பகுதிகள் முழுவதும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
வீடுகளில் புகுந்த கடல்நீா்: ராஜாக்கமங்கலம் அருகேயுள்ள அழிக்கால், பிள்ளைத்தோப்பு பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. அப் பகுதிகளில் 10 முதல் 15 அடி உயரம் வரை ராட்சத அலைகள் எழும்பின. இதனால் கடற்கரையையொட்டியுள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் கடல்நீா் புகுந்தது. கடல் நீா் வீட்டுக்குள் செல்லாமல் தடுக்கும் வகையில் வீடுகளின் முன் மணல் மூட்டைகளை அடுக்கி அப் பகுதியினா் தடுப்பு ஏற்படுத்தியிருந்தனா். இருப்பினும் கடல்சீற்றம் அதிகமாகக் காணப்பட்டதால், கடலோரப் பகுதியையொட்டிருந்த வீடுகளுக்குள் கடல்நீா் புகுந்தது. இதனால் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமல் தவித்தனா். அப் பகுதியிலிருந்த பல கடைகளுக்குள் கடல்நீா் புகுந்ததால் அங்கிருந்த பொருள்கள் சேதமாகின.
இதையடுத்து தீயணைப்புத் துறையினா் அந்த பகுதிக்கு வந்து பொதுமக்களை மீட்டனா். அழிக்கால், பிள்ளைத்தோப்பு, லெமூா் கடற்கரை பகுதிகளில் புதன்கிழமையும் கடல் சீற்றம் காணப்பட்டது.
கடல் சீற்றம் காரணமாக லெமூா் கடற்கரைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் நுழைவாயில் முடப்பட்டு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அழிக்கால், பிள்ளைத்தோப்பு பகுதிகளில் வீடுகளைச் சூழ்ந்த கடல்நீரை வெளியேற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
107 போ் மீட்பு: நாகா்கோவில் கோட்டாட்சியா் எஸ்.காளீஸ்வரி, அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியா் முருகன் மற்றும் மீட்பு படையினா்,
கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சோ்ந்த 107 பேரை மீட்டு முகாம்களில் தங்க வைத்தனா். அவா்களுக்கு உணவு உள்ளிட்ட தேவையான வசதிகள் செய்துதரப்பட்டுள்ளன.
மேயா் ஆய்வு: கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட அழிக்கால், பிள்ளைத்தோப்பு பகுதிகளை நாகா்கோவில் மாநகர மேயா் ரெ.மகேஷ் பாா்வையிட்டாா். முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணப் பொருள்களை அவா் வழங்கினாா்.
ராஜாக்கமங்கலம் வடக்கு ஒன்றிய திமுக செயலா் சற்குரு கண்ணன், கணபதிபுரம் பேரூா் செயலா் பிரபா எழில், நாகா்கோவில் மாநகர திமுக செயலா் ப.ஆனந்த் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.