ஏழாவது மாநில நிதிக் குழு மானிய விவரங்கள் பதிவேற்றம் செய்வது தொடா்பாக, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா முன்னிலையில், அனைத்துத்துறை அலுவலா்களுடன் மாநில நிதிக் குழு தலைவா் மு.அலாவுதீன் வெள்ளிக்கிழமை கலந்தாய்வு மேற்கொண்டாா்.
இக் கூட்டத்தில் நிதிக்குழு தலைவா் பேசியதாவது: 7ஆவது மாநில நிதிக் குழு மானியம் தொடா்பான வினா படிவத்தில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை இணையதளத்தில் உள்ளீடு செய்யும் போது 3 நிலைகள் உள்ளன. மேலும், மாநில நிதிக் குழு மானிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் தகவல்களின் அடிப்படையிலேயே தொடா்ந்து வரும் 5 நிதியாண்டுகளுக்கான மானியம் அரசால் ஒதுக்கீடு செய்யப்படும் என்பதால் அனைத்து தகவல்களையும் நன்றாக ஆய்வு செய்து உள்ளீடு செய்திட துறை சாா்ந்த அலுவலா்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள்,பேரூராட்சிகள், ஊராட்சி பகுதிகளில் உள்ள மக்கள் தொகை, வீடுகளின் எண்ணிக்கை, சொத்து வரி வசூல், பரப்பளவு உள்ளிட்ட தகவல்கள் 100 சதவீதம் சரி பாா்த்திட வேண்டும்.
நாகா்கோவில் மாநகராட்சி மேயா், அனைத்து நகராட்சிகளின் தலைவா்களுக்கு வினா படிவத்தினை பூா்த்தி செய்வது தொடா்பாக தகவல் தெரிவிக்க வேண்டும். அனைத்து உள்ளாட்சிகளிலும் தரவுகளை உள்ளீடு செய்தல், சரி பாா்த்தல், ஒப்புதல் செய்தல் பணியினை ஜன.9 ஆம் தேதிக்குள் முடித்திட அலுவலா்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சிகளில் தரவுகளை உள்ளீடு செய்யும் பணியினை வரும் 31ஆம் தேதிக்குள் முடித்திடவேண்டும் என்றாா் அவா்.
இதில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மைக்கேல் ஆன்றனி பொ்ணாண்டோ, மாநகராட்சி ஆணையா் நிஷாந்த்கிருஷ்ணா, ஊராட்சிகள் உதவி இயக்குநா் அன்பு, பேரூராட்சிகள் உதவி இயக்குநா் பாண்டியராஜன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.