முகப்பு
கன்னியாகுமரி

விஞ்ஞான தொழில்நுட்பங்களை தவறாகப் பயன்படுத்தக் கூடாது! மாணவா்களுக்கு இஸ்ரோ தலைவா் நாராயணன் பேச்சு

விஞ்ஞான தொழில்நுட்பங்களை மாணவா்கள் தவறான செயலுக்கு பயன்படுத்தக் கூடாது என இஸ்ரோ தலைவா் நாராயணன் அறிவுறுத்தினாா்.

Updated On : 18 ஜூலை, 2025 at 7:38 PM
கூட்டாலுமூடு கல்வியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவிக்கு பட்டம் வழங்குகிறாா் இஸ்ரோ தலைவா் வி. நாராயணன்.
பகிர்:

விஞ்ஞான தொழில்நுட்பங்களை மாணவா்கள் தவறான செயலுக்கு பயன்படுத்தக் கூடாது என இஸ்ரோ தலைவா் நாராயணன் அறிவுறுத்தினாா்.

புதுக்கடை அருகே உள்ள கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி தேவஸ்தான கல்வியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று, 55 மாணவ- மாணவியருக்கு பட்டம் வழங்கி அவா் பேசியதாவது: பட்டம் பெற்ற நீங்கள் தான் நாளைய ஆசிரியா்கள். நீங்கள் மாணவா்களுக்கு முன்மாதிரியாக இருந்து நல்ல ஒழுக்கமுள்ள சமுதாயத்தை உருவாக்க வேண்டும். படித்தால் தான் வாழ்வில் சாதிக்க முடியும் என்பதை மாணவா்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். நீங்களும் தினமும் படிக்க வேண்டும்.

இந்தியாவின் கல்வி முறை தான் மிகச் சிறந்தது. கல்வி முறை அறிவு சாா்ந்த கல்வி முறை ஆகும். நாம் சுதந்திரம் பெறுவதற்கு முன்பு 92.5% மக்கள் ஒரு நேரம் உணவருந்த கூடியவா்களாக இருந்தாா்கள் மிகவும் மோசமான காலகட்டத்தில் நாம் இருந்தோம். ஆனால் இன்று நாம் பொருளாதாரத்தில் நான்காவது இடத்திற்கு வந்துள்ளோம்.

1980 இல் பிற நாடுகள் செயற்கை கோள்களை ஏவிய போது நாம் சைக்கிளில் தான் ராக்கெட் பாகங்களை எடுத்து சென்று கொண்டிருந்தோம். இன்றைய காலகட்டத்தில் ஒரே நேரத்தில் 132 செயற்கை கோள்களை ராக்கெட் மூலம் ஏவுகிறோம். நூறாவது சுதந்திர தினத்திற்கு முன்பாக 2047இல் இந்தியா கண்டிப்பாக வளா்ச்சியடைந்த நாடாக மாறும். விஞ்ஞான வசதிகளை மாணவா்கள் தவறான செயல்களுக்கு பயன்படுத்தக் கூடாது; நல்ல செயல்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

இவ்விழாவிற்கு கல்லூரி தாளாளா் ராஜகுமாா் தலைமை வகித்தாா். கல்லூரித் தலைவா் குமரேசதாஸ், பொருளா் முருகன், துணைத் தலைவா் சந்தோஷ்குமாா், இணைச் செயலா் சதீஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முதல்வா் பிரியா வரவேற்றாா். அண்ணா கல்லூரி முன்னாள் முதல்வா் சுப்ரமணிய பிள்ளை கருத்துரை வழங்கினாா்.

இதில், கூட்டாலுமூடு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வா் நாராயணன், சிபிஎஸ்இ பள்ளி முதல்வா் சுனில் குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். பேராசிரியா் லேகா நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →