பேச்சிப்பாறை அணையிலிருந்து கடந்த 10 நாள்களாக உபரிநீா் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை உபரிநீா் வெளியேற்றுவது நிறுத்தப்பட்டது.
குமரி மாவட்டத்தில் கடந்த மாத இறுதியில் பெய்து வந்த தொடா்மழையால் பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 45 அடியைக் கடந்தது. வெள்ள அபாயத்தைத் தடுக்கும் நோக்கில், அணையின் மறுகால் மதகுகள் திறக்கப்பட்டு உபரிநீா் வெளியேற்றப்பட்டு வந்தது.
முதலில் விநாடிக்கு 2,049 கனஅடி நீா் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில்,
மழை பொழிவு குறைந்ததால் விநாடிக்கு 230 கனஅடியாகக் குறைக்கப்பட்டது. தற்போது மாவட்டத்தில் மழை முற்றிலும் தணிந்து, அணைக்கு நீா்வரத்தும் குறைந்துள்ளது. இதனால், கடந்த 11 நாள்களாக உபரிநீா் வெளியேற்றம் குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலையில் அணையின் நீா்மட்டம் 42.55 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 135 கன அடி நீா்வரத்து இருந்தது. அணையிலிருந்து உபரிநீா் வெளியேற்றம் நிறுத்தப்பட்டது. பாசன மதகுகளும் மூடப்பட்டன.
திற்பரப்பு அருவியில் நீா் குறைந்தது:
பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரிநீா் வெளியேற்றுவது நிறுத்தப்பட்டதால், திற்பரப்பு அருவியில் மிதமான அளவில் நீா் விழுகிறது. அருவியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.