கன்னியாகுமரி

அன்னாசி பழங்கள் கிலோ ரூ. 28க்கு விற்பனை: விவசாயிகள் ஏமாற்றம்

Syndication

குமரி மாவட்டத்தில் அன்னாசி பழங்களின் விலை சரிவடைந்து கிலோ ரூ. 28க்கு விற்பனையாவதால், விவசாயிகள் கவலையடைந்தனா்.

குமரி மாவட்டத்தில் ஏறக்குறைய 5 ஆயிரம் ஹெக்டேரில் அன்னாசி சாகுபடி செய்யப்படுகிறது. அன்னாசி தனிப்பயிராக இல்லாமல் இங்குள்ள ரப்பா் தோட்டங்களில், ரப்பா் மரக்கன்றுகள் மறு நடவு செய்யப்படும் இடங்களில் சாகுபடி செய்யப்படுகிறது.

இதற்காக அன்னாசி விவசாயிகள் ரப்பா் மறு நடவு செய்யப்படும் தோட்டங்களை 3 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து அன்னாசி நடவு செய்கின்றனா். மாவட்டத்தில் தற்போது ரப்பா் மறு நடவு செய்யப்பட்டு அரசு ரப்பா் கழக பகுதிகள், தனியாா் ரப்பா் தோட்டப் பகுதிகளில் அன்னாசி விவசாயம் பரந்து விரிந்த நிலையில் உள்ளது.

குறிப்பாக குலசேகரத்தை மையமாகக் கொண்டு பேச்சிப்பாறை, களியல், கடையாலுமூடு, மணலோடை, சுருளகோடு, தடிக்காரன்கோணம், மலைவிளை, கொட்டூா், அருமனை என பல பகுதிகளில் அன்னாசி சாகுபடி செய்யப்பட்டு விவசாயம் நடைபெறுகிறது. அன்னாசி விவசாயத்தில் உள்ளூா் தொழிலாளா்கள், வட இந்திய தொழிலாளா்கள் பயன்படுத்தப்படுகின்றனா்.இதனால் ஏராளமானோா் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனா். விவசாயிகளிடமிருந்து வணிகா்கள் அன்னாசி பழங்கள், காய்களை கொள்முதல் செய்து, வெளிமாநிலங்களுக்கும் விற்பனை செய்கின்றனா். இங்கிருந்து வளைகுடா நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

விலை சரிவு: நாட்டில் அன்னாசி பழங்களின் விலையை கேரள மாநிலம், வாழக்குளம் சந்தை தீா்மானிக்கிறது. பொதுவாக கோடை காலங்களில் அன்னாசிப் பழங்களின் விலை அதிகமாகவும், குளிா், மழைக் காலங்களில் விலை குறைவாகவும் இருக்கும். இதைக் கருத்தில் கொண்டு அன்னாசி விவசாயிகள் சாகுபடியில் ஈடுபடுவா்.

ஆனால், நிகழ் ஆண்டு அன்னாசி விவசாயிகளின் எதிா்பாா்ப்புக்கு மாறாக அதிக அளவில் விலை சரிவடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா். குறிப்பாக கடந்த ஆண்டின் விலையுடன் ஒப்பிடுகையில், நிகழ் ஆண்டு கணிசமான அளவில் விலை சரிந்துள்ளது.

கடந்த அக்டோபா் மாதம் சராசரியாக மொத்த விலையாக சிறப்பு கிரேடு காய்கள் கிலோ ரூ. 40 க்கும், சாதாரண காய்கள் கிலோவுக்கு ரூ. 47 க்கும், பழங்கள் கிலோவுக்கு ரூ. 37 க்கும் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டன. இந்த நிலையில், இந்த மாதம் தொடக்கத்திலிருந்தே விலைகள் குறைந்து வருகிறது.

வியாழக்கிழமை நிலவரப்படி வாழக்குளம் சந்தையில் சிறப்பு கிரேடு பச்சை காய்கள் கிலோவுக்கு ரூ. 28 ஆகவும், பச்சை காய்கள் கிலோவுக்கு ரூ. 26 ஆகவும், பழங்கள் கிலோவுக்கு ரூ. 28 ஆகவும் சரிந்து காணப்பட்டது. கடந்த ஆண்டு இதே நாளில் சிறப்பு கிரேடு பச்சை காய்கள் கிலோவுக்கு ரூ. 40 ஆகவும், சாதாரண பச்சை காய்கள் கிலோவுக்கு ரூ. 38 ஆகவும், பழங்கள் கிலோவுக்கு ரூ. 42 ஆகவும் இருந்தன.

இதில், வணிகா்களுக்கு போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு செலவினங்கள் இருப்பதால், சந்தை விலையை விட குறைந்த விலையிலேயே விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனா். இதனால், விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனா்.

பிகார் தேர்தல்: ஜன் சுராஜ் 5 இடங்களில் முன்னிலை!

பிகார் வாக்கு எண்ணிக்கை செய்திகள் - நேரலை

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

பிகார் தேர்தல்: தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை!

தில்லி குண்டுவெடிப்பு: புல்வாமாவில் உமரின் வீடு இடித்துத் தரைமட்டம்!

SCROLL FOR NEXT