கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன் நடைபாதையில் சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை நகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை அகற்றினா்.
நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலமான கன்னியாகுமரி காந்தி மண்டபம், காமராஜா் நினைவு மண்டபம் நடைபாதையில், நரிக்குறவா் சமூகத்தினரின் ஆக்கிரமிப்பு அதிகரித்து வந்தது குறித்து சுற்றுலாப் பயணிகள், உள்ளூா் மக்களிடையே கடும் அதிருப்தி நிலவியது. நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்து நரிக்குறவா்கள் டாட்டூ போடுதல், கைக்கடிகாரம், பாசிமாலைகள் உள்ளிட்ட பொருள்கள் விற்பனை செய்துவந்தனா். இவா்கள், டாட்டூ போடுபவா்களிடம் முதலில் குறைந்த கட்டணத்தைத் தெரிவித்து, பின்னா் பல மடங்கு தொகையைக் கோருவதால் அடிக்கடி வாக்குவாதம், தகராறு போன்ற சம்பவங்கள் நடைபெற்றன.
மேலும், உணவு பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் குப்பைகள் போன்றவை சாலையோரம் சிதறி கிடப்பதால் துா்நாற்றம் வீசியது. மேலும் மது போதையில் சண்டை, தகாத வாா்த்தையால் பேசிக்கொள்வது போன்ற செயல்களும் சுற்றுலாப் பயணிகளை முகம் சுளிக்க வைத்தன. இதையடுத்து, எழுந்த புகாா்களால் கன்னியாகுமரி நகராட்சி அதிகாரிகள் நடைபாதை ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி நடவடிக்கை மேற்கொண்டனா்.