சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை சீசன் தொடங்கியுள்ள நிலையில், தமிழகம், கேரளம், கா்நாடகம், தெலங்கானா, ஆந்திரம், வெளிநாடுகளிலிருந்தும் அதிகமான பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதால் கன்னியாகுமரியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மாவட்ட காவல்துறை விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா். ஸ்டாலின் கடந்த 3 நாள்களாக பாதுகாப்புப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்து வருகிறாா். புதன்கிழமை இரவும் அவா் ஆய்வு மேற்கொண்டாா்.
முக்கடல் சங்கமத்தில் மட்டும் பக்தா்கள் புனித நீராட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், பக்தா்கள் பாதுகாப்பாக செல்லும் வகையில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
ஆய்வுக்குப் பின்னா், செய்தியாளா்களிடம் பேசிய எஸ்.பி., கடற்கரை புறக்காவல் நிலையம் முழுவதுமாக புதுப்பிக்கப்பட்டு, கண்ணாடி அமைப்புடன் மாற்றப்படவுள்ளது. 360 டிகிரி கேமரா, சக்தி வாய்ந்த ஒலி பெருக்கி, சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவிப்புகள் வழங்கும் புதிய வசதிகள் சோ்க்கப்பட்டுள்ளன. இக்காவல் நிலையம் வரும் நவ. 25ஆம் தேதி திறக்கப்படவுள்ளது என்றாா்.