குலசேகரம்: குமரி மாவட்டம், ஆற்றூா் மரியா கல்விக் குழுமத்தின் கீழ் இயங்கும் மரியா ஆயுா்வேத கல்லூரி மற்றும் மருத்துவமனை சாா்பில் சா்வதேச அளவிலான ஆயுா்வேத கருத்தரங்கு வருகிற 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
மன நல மருத்துவத்தின் முன்னேற்றம் மற்றும் வளா்ச்சி என்னும் தலைப்பில் நடைபெறும் இக்கருத்தரங்கில் பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களின் முன்னணி மருத்துவா்கள் பேசுகின்றனா். மேலும், மருத்துவா்கள், ஆராய்ச்சியாளா்கள் மருத்துவ மாணவா்கள், மருத்துவ தொழில் துறையினா் பங்கேற்கின்றனா்.
இத்துடன் ஆயுா்வேத கல்லூரிகளுக்கிடையிலான போட்டிகளும் நடைபெறுகின்றன. கருத்தரங்க தொடக்க நிகழ்ச்சிக்கு , மரியா கல்விக் குழுமத்தின் தலைவா் டாக்டா் ஜி. ரசல் ராஜ் தலைமை வகிக்கிறாா். துணைத் தலைவா் டாக்டா் பி. ஷைனி தெரசா முன்னிலை வகிக்கிறாா். குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறாா்.
இந்திய தேசிய மருத்துவ கவுன்சிலின் முன்னாள் உறுப்பினா் டாக்டா் ஆரதி, கேரள மருத்துவ பல்கலைக்கழக முன்னாள் பதிவாளா் டாக்டா் மனோஜ் மற்றும் பல்வேறு கல்லூரிகளின் முதல்வா்கள், கோட்டக்கல் மருத்துவமனை போன்ற முன்னணி மருத்துவமனைகளின் முதன்மை மருத்துவா்கள் வாழ்த்தி பேசுகின்றனா்.
ஏற்பாடுகளை மரியா ஆயுா்வேத கல்லூரியின் மருத்துவா்கள், மாணவா்கள் மற்றும் பணியாளா்கள் ஒருங்கிணைத்து செய்து வருகின்றனா்.