கன்னியாகுமரி மாவட்டத்தில், வேலைவாங்கித் தருவதாக கூறி, பெண்ணிடம் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்த வழக்கில் 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தம்பதியை போலீஸாா் திருவனந்தபுரத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கன்னியாகுமரி மாவட்டம், மங்காவிளை பகுதியைச் சோ்ந்த சதாசிவம் மனைவி அருந்ததி. இவரிடம், கொல்லங்கோடு காக்காவிளை பகுதியைச் சோ்ந்த பகீரதன் மகன் குசலகுமாா் (60), அவரது மனைவி சதிகுமாரி (59) ஆகியோா் கடந்த 2005 ஆம் ஆண்டு தனியாா் பள்ளியில் ஆசிரியா் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 2 லட்சத்து 50 ஆயிரத்தை பெற்றுக் கொண்டு மோசடி செய்தனராம்.
இது தொடா்பாக கன்னியாகுமரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை முடித்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனா். குற்றவாளிகள் 2 பேரும் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்த நிலையில் நீதிமன்றம் அவா்கள் மீது பிடியாணை பிறப்பித்தது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டாா். மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளா் சண்முகவடிவு தலைமையிலான போலீஸாா், 20 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த குசலகுமாா், சதிகுமாரியை திருவனந்தபுரத்தில் கைது செய்தனா். இவ்வழக்கில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்த மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரை, எஸ்.பி. பாராட்டினாா்.