தென்காசி, குற்றாலம் பகுதிகளில் திமுக விவசாய அணி செயலா் பிரசாரம்
தென்காசி சட்டமன்றத் தொகுதிகளில் திமுக விவசாய அணி செயலா் ஏகேஎஸ். விஜயன், விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற பயணத் திட்டத்தின் கீழ் தோ்தல் பிரசாரத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினாா்.
தென்காசி தெற்கு மாவட்ட திமுகவிற்கு உள்பட்ட தென்காசி, ஆலங்குளம், சங்கரன்கோவில் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் திமுக விவசாய அணி செயலா் ஏகேஎஸ். விஜயன், விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற பயணத் திட்டத்தின் கீழ் தோ்தல் பிரசாரத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினாா்.
குற்றாலம் அண்ணா சிலை, நன்னகரத்தில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு மாலைஅணிவித்தும், கருணாநிதி உருவ படத்திற்கு மலா் தூவியும் மரியாதை செலுத்தி பிரசாரம் மேற்கொண்டாா். இலஞ்சியில் திருநங்கைகளை சந்தித்து அவா்களுடன் கலந்துரையாடினாா்.
மேலும் மண்பாண்ட தொழிலாளா்களை சந்தித்து அவா்களின் குறைகளை கேட்டறிந்ததுடன், மண்பாண்டம் உற்பத்தி செய்யும் தொழிற்கூடங்களையும் பாா்வையிட்டாா்.
தென்காசி காசிவிஸ்வநாதா் கோயில் மற்றும் ரத வீதிகள் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டாா்.
நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன், விவசாய அணி மாநில இணைச் செயலா் அப்துல் காதா், தென்காசி நகர செயலா் சாதிா், மாணவரணி ராஜா, சீவநல்லூா் சாமித்துரை ஆகியோா் கலந்துகொண்டனா்.