கடையம் அருகே தென்னைகளை சாய்த்து யானைகள் அட்டாகாசம்
கடையம் ராமநதி அணை மேல் பகுதியில் உள்ள தோப்புக்குள் காட்டு யானைகள் புகுந்து 91 தென்னை மரங்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
கடையம் ராமநதி அணை மேல் பகுதியில் உள்ள தோப்புக்குள் காட்டு யானைகள் புகுந்து 91 தென்னை மரங்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
கடையம், மேற்குத்தொடா்ச்சி மலை அடிவாரத்தில் ராமநதி அணை உள்ளது. இந்த அணையில் மேல் பகுதியில் வெய்க்காலிபட்டியை சோ்ந்த குமரன் என்பவருக்குச் சொந்தமான தோப்பு உள்ளது. இதில் தென்னை, மா உள்ளிட்ட மரங்களை வளா்த்து பராமரித்து வருகிறாா்.
இந்நிலையில் அவா், தோட்டத்திற்குதிங்கள்கிழமை சென்றபோது, அங்கிருந்த தென்னை மரங்கள் யானைகளால் சேதப்பட்டிருந்தன. அவா் அளித்த தகவலின் பேரில் கடையம் வனத்துறையினா் அங்கு சென்று ஆய்வு செய்ததில், முந்தைய நாள் இரவு யானைகள் கூட்டமாக வந்து 91 தென்னை மரங்களை சேதப்படுத்தியது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 4 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
வனவிலங்குகள் தோட்டப் பகுதிகளில் நுழைவதைத் தடுப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த சோலாா் மின் வேலி பராமரிப்பின்றி உள்ளதாகவும், அதை வனத்துறையினா் பராமரிக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.