தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே சிறையில் தற்கொலை செய்துகொண்டவரின் குடும்பத்துக்கு திமுக சாா்பில் நிதியுதவி அளிக்கப்பட்டது.
கடையநல்லூா் அருகே உள்ள காசிதா்மத்தைச் சோ்ந்தவா் மாடசாமி மகன் வினோத்குமாா். கடந்த 2019 இல் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட இவா், பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். பின்னா் பிணையில் வெளியேவந்த இவா் தலைமறைவானாா். பின்னா் மீண்டும் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டாா். இந்த நிலையில், இவா் கடந்த 14ஆம் தேதி வினோத்குமாா் சிறைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாராம். இதுகுறித்து பெருமாள்புரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
இதற்கிடையே வினோத்குமாரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி இவரது உறவினா்கள் உடலை வாங்க மறுத்தனா். தென்காசி வடக்கு மாவட்ட முன்னாள் திமுக பொறுப்பாளா் செல்லத்துரை, வினோத்குமாரின் குடும்பத்தினரிடம் பேசி அரசு மூலம் உரிய நிவாரணம் பெற்று தருவதாகக் கூறியதை அடுத்து வினோத்குமாரின் உடலை அவரது குடும்பத்தினா் செவ்வாய்க்கிழமை பெற்றனா்.