திருநெல்வேலி

நெல்லை மாவட்ட கடற்கரையில் மீன்பிடித் துறைமுகம்நிறைவேறுமா, மீனவ மக்களின் நீண்டகால கனவுத் திட்டம்?

திருநெல்வேலி மாவட்ட கடற்கரையில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்பட வேண்டும் என்ற, தங்களது நெடுநாள் கனவுத் திட்டம் நிறைவேறும் நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் இம் மாவட்ட மீனவ மக்கள்.

தினமணி

திருநெல்வேலி மாவட்ட கடற்கரையில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்பட வேண்டும் என்ற, தங்களது நெடுநாள் கனவுத் திட்டம் நிறைவேறும் நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் இம் மாவட்ட மீனவ மக்கள்.

இம் மாவட்டத்தின் தென்கிழக்கு எல்லையாக 40 கிமீ தொலைவு கொண்ட கடற்கரை உள்ளது. தூத்துக்குடி மாவட்ட எல்லையான பெரியதாழையின் மேற்குப் பகுதியில் தொடங்கி ஜார்ஜ் நகர், மிக்கேல்நகர், கூடுதாழை, கூட்டப்பனை, உவரி, தோமையார்புரம், கூத்தங்குழி, விஜயாபதி, இடிந்தகரை, பஞ்சல், பெருமணல் கூட்டப்புளி ஆகிய கடற்கரைக் கிராமங்கள் அமைந்துள்ளன. இக் கிராமங்களில் 95 சதவீதம் பேர் கடலில் மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பியுள்ளனர். இத் தொழிலில் 25 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர். இவர்களை நம்பி மீன் வியாபாரிகள், மீன்பிடிக் கருவிகள் விற்போர், மீன்பிடிப் படகு பழுது நீக்குவோர் என, 2,000-க்கும் மேற்பட்டோர் தொழில் செய்து வருகின்றனர்.

தலைமுறை தலைமுறையாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள இவர்கள், தொழிலை விரிவுபடுத்தவும், பாதுகாப்பாக செய்யவும் புதிய தொழில்நுட்பங்கள் கிடைத்திருக்கிறதா என்றால், இல்லை என்பதே பதிலாக உள்ளது. இதர துறைகளில் வரும் புதிய தொழில்நுட்பங்கள் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுள்ள, திருநெல்வேலி மாவட்ட மீனவர்களுக்குக் கிடைப்பதில்லை. மீன்பிடிப் படகுகளை கடலுக்குள் கொண்டுசெல்வதும், மீன்பிடித்துத் திரும்பும்போது படகுகளைக் கரையேற்றுவதும் மிகப்பெரிய போராட்டமாக உள்ளது.

இப் பகுதி கடற்கரையில் "கடலடி' எனப்படும் கடல் அலை அகோரமாக இருப்பதால் படகுகளை கடலில் விட்டுவைக்க முடிவதில்லை. இப் பகுதி மக்களுக்கு மற்றுமோர் அச்சுறுத்தல், கடல் அரிப்பு. அதிகரிக்கும் கடலரிப்பால் இக் கிராமங்களின் நிலப்பரப்பு, நாளுக்குநாள் குறைந்துவருகிறது. கடலரிப்பைத் தடுக்க இதுவரை சரியான செயல்திட்டம் நிறைவேற்றப்படவில்லை என இப் பகுதி மீனவர்கள் அதிருப்தியும் வேதனையும் தெரிவிக்கின்றனர்.

மீன்பிடித் தொழிலை அபிவிருத்தி செய்ய திருநெல்வேலி மாவட்ட கடற்கரைக் கிராமங்களில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படவேண்டும் என்பதுதான் இப் பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை. துறைமுகம் அமைந்தால், மீன்களைப் பதப்படுத்தவும், பாதுகாக்கவும் நவீன குளிரூட்டப்பட்ட நிலையங்களும் வந்துவிடும்; மேலும் சாலை, போக்குவரத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு, தொழில் வளர்ச்சியடைவதுடன் வாழ்வாதாரமும் உயர்ந்துவிடும் என்பதுதான் இம் மக்களின் கனவாக உள்ளது.

இதுதவிர, கடலுக்குச் சென்று காணாமல்போகும் மீனவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க ஹெலிகாப்டர் வசதியோ, நவீன ரோந்து படகுகளோ மீன்வளத் துறை வசம் இல்லை எனக் கூறப்படுகிறது. கடல் சீற்றம், கடலின் தன்மை குறித்து மீனவர்களுக்குத் தெரியப்படுத்த தொழில்நுட்ப வசதிகளும் இப் பகுதியில் இல்லை.

இது தொடர்பாக உவரி ஊராட்சி முன்னாள் தலைவர் அந்தோனி கூறியதாவது:

இம் மாவட்ட கடற்கரைக் கிராமங்களில் பிடிக்கப்படும் மீன்கள் கேரளம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும், கடலூர் உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன. வெளிநாட்டுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இறால், கணவாய் போன்ற உயர் ரக மீன்கள் இம் மாவட்ட கடற்கரையில்தான் அதிகம் கிடைக்கிறது. இத்தகைய வளமிக்க மீன்பிடித் தொழில் செழிக்கவும், மீனவர் வாழ்க்கைத் தரம் உயரவும் இம் மாவட்டத்தில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்பட வேண்டும் என்பதுதான் மீனவ மக்களின் நெடுநாளைய கனவுத் திட்டம் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT