மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள மருத்துவர் சமூகத்துக்கு தனியாக 5 சதவீதம் உள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என திருநெல்வேலி மாவட்ட கல்வி பயின்ற மற்றும் பணியில் உள்ள மருத்துவர் சங்கம் (டீம்) வலியுறுத்தியுள்ளது.
திருநெல்வேலியில் சனிக்கிழமை நடைபெற்ற டீம் அமைப்பின் 8ஆவது ஆண்டு பொதுக் குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்துக்கு, டீம் அமைப்பின் தலைவர் பி. ஜெயமணி தலைமை வகித்தார். தொழிலதிபர் எஸ். ரமேஷ்பாபு, மருத்துவர் சமுதாய முன்னேற்றச் சங்க துணைத் தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கச் செயலர் செல்வ சூடாமணி வரவேற்றார். பொருளாளர் வி. மாயாண்டி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தார். ஆண்டு மலரை மாவட்ட நீதிபதி (ஓய்வு) பூபாலன் வெளியிட்டார். புதுதில்லி சுனில் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் உமேஷ் சரோகா சிறப்புரையாற்றினார்.
பின்னர், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மருத்துவர் சமுதாயமானது கல்வி, வேலைவாய்ப்பில் பின்தங்கி, பொருளாதார நிலையிலும் மிகவும் பின்தங்கியுள்ளது. எனவே, மருத்துவர் சமூகத்துக்கு 5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கக் கோரி தமிழக முதல்வருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து உள் ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்.
நாடக மேடை மூலம் சுதந்திரப் போராட்டத்துக்கு பெரும் பணியாற்றிய தியாகி எஸ்.எஸ். விஸ்வநாததாஸ் உருவச் சிலையை சென்னையில் அமைக்க வேண்டும். மேலும், விஸ்வநாத தாஸின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிப் பாடப் புத்தகங்களில் சேர்க்க வேண்டும்.
மருத்துவர் சமூகத்தினருக்கு பல பெயர்களில் சாதிச் சான்று வழங்குவதை தவிர்த்து மருத்துவர் என்ற ஒரே பெயரில் சாதிச் சான்று வழங்க வேண்டும். போட்டித் தேர்வுகளில் பயிற்சி பெற வசதியாக, சென்னையில் மருத்துவர் சமுதாயத்துக்கும் பயிற்சி மையம் அமைக்க வேண்டும்.
மருத்துவம், சித்த மருத்துவம் படிப்புகளில் மருத்துவர் சமுதாயத்துக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட ஒதுக்கீட்டை மீண்டும் வழங்க ஆவன செய்ய வேண்டும். இந்து மருத்துவர்கள் அனைவரும் எம்பிசி பட்டியலில் உள்ள சூழலில், கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய மருத்துவர்களை பிசி பட்டியலில் இடம்பெறச் செய்வது ஏற்புடையதல்ல. அனைத்து மருத்துவர்களையும் எம்பிசி பட்டியலில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக் கூட்டத்தில், 2016-17 கல்வியாண்டில் 10, 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த மருத்துவர் சமூக மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பிற்பகலில் மருத்துவர் சமுதாய வரன் சங்கம நிகழ்ச்சியும் நடைபெற்றது. முன்னதாக காலையில் கண் பரிசோதனை, பல் பரிசோதனை, ரத்தப் பரிசோதனை உள்ளிட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில், டீம் சங்க நிர்வாகிகள், மருத்துவர் சமுதாய முன்னேற்றச் சங்கத்தினர் மற்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மருத்துவர் சமுதாயத்தினர் பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.